அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான அமேசன், உலகளவில் மேலும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, இது தொடர்பான மின்னஞ்சல் ஒன்று தவறுதலாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சில மணிநேரங்களிலேயே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமேசன் உயர் அதிகாரி ஒருவரின் உதவியாளரால் ஒரு மின்னஞ்சல் நகல் தவறுதலாக ஊழியர்களுக்குப் பகிரப்பட்டது.
‘புராஜெக்ட் டான்’ (Project Dawn) எனப் பெயரிடப்பட்டிருந்த இத் திட்டம், ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கான இரகசியப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் கொஸ்டாரிகா ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படவுள்ளதாக அந்த மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தெரியவந்தது.
அமேசன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி இது குறித்துக் கூறுகையில், “நிறுவனத்தை வலுப்படுத்தவும், அதிகாரத்துவத்தைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபரில் 14,000 ஊழியர்கள் நீக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது 16,000 பேர் நீக்கப்படுகின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.
அமேசனில் உலகளவில் 15 இலட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நீக்கம் எஞ்சியிருக்கும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசன் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி (Andy Jassy) நிறுவன கலாசாரத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.
ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்திற்கு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் தொலைபேசி கட்டண மீளளிப்பு போன்ற சிறு செலவுகள் கூட தற்போது கண்காணிக்கப்படுகின்றன.
அமேசன் பிரஷ் (Amazon Fresh) மற்றும் அமேசன் கோ (Amazon Go) போன்ற 70 பலசரக்கு அங்காடிகளை மூடவும் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
“உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. நாம் இதுவரை செய்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது,” என ஆண்டி ஜாஸி ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களது பணிக்காலத்தின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதுடன், நிறுவனத்தில் உள்ள மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










