நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 49 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான எ.சி கஜநாயக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இலங்கை அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட தகுதியுள்ள கைதிகளுக்கே இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் சிறையில் கழித்த ஒவ்வொரு வருடத்திற்கும் தலா ஒரு வாரம் வீதம் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு இந்த பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
மேலும், 75 ஆயிரம் ரூபாவிற்கும் குறைவான தண்டப்பணத்தை செலுத்த முடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலமும் இதன் கீழ் இரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
குறித்த 49 கைதிகளும் நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு (04.02.2026) நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










