பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு நாட்டின் பொருளாதார நன்மைகள்  செல்வதை உறுதி செய்வதே எமது குறிக்கோள் – ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றியும் குவிந்திருந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து பொருளாதார நன்மைகளின் பலன்களும் நாட்டின் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்திலுள்ள மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், எவர், எப்போது, எவ்வாறான பதவியில், இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, அதன்படி,இந்த நாட்டில் நீதி மற்றும் நியாயம் தொடர்பாக நாட்டு மக்களின் அதிக கவனத்தையும் நம்பிக்கையையும் பெறும் வருடமாக இந்த வருடம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (06.02.2026) முற்பகல் நடைபெற்ற டித்வா சூறாவளியால் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகள் சேதமடைந்த தனிநபர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதுடன், அடையாளரீதியாக ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கை 08/2025 இன் தொடர் இலக்கம் 12 இன் படி வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாவில் முதல் தவணையாக தலா 20 இலட்சம் ரூபாவுக்கான காசோலைகள் இங்கு வழங்கப்பட்டன. தமது சொந்தமான காணியில் அல்லது முன்னர் வசித்த இடத்தில் வீடுகளை நிர்மாணிப்பவர்கள் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணியில் வீடுகளை நிர்மாணிப்பவர்கள் இதில் உள்ளடங்குவர்.

மேலும், வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கை 08/2025 இன் தொடர் இலக்கம் 14 இன் படி, வீடுகள் பகுதியளவு சேதமடைந்தவர்களுக்கு மதிப்பீட்டின்படி வீடுகளை புனரமைக்க இழப்பீடு வழங்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீட்டை குறித்த சுற்றறிக்கையின்படி அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபா வரை வழங்க முடியும் என்றாலும், உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கத்தில், பயனாளிகளின் விருப்பப்படி, மதிப்பீடு மேற்கொள்ளாமல் 05 இலட்சம் ரூபா கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் பயனாளிகளுக்கு 05 இலட்சம் ரூபா பகுதியளவு சேத இழப்பீட்டுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக தமது வர்த்தக நிலையங்கள் அல்லது இயந்திரங்கள் சேதமடைந்தவர்களுக்கு தமது வர்த்தகங்களை மீண்டும் தொடங்க தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடும் இதன்போது வழங்கப்பட்டன. சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவு என்ற எந்தவொரு வேறுபாடும் இன்றி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்களுக்கும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க , ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் அடிப்படைப் பொறுப்பாகும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது எதிர்கொள்ளும் அழிவுகளையும் பிரச்சனைகளையும் நேரடியாக நாம் அனுபவித்தோம். இந்நாட்டு மக்கள் மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையாலும், எரிபொருளுக்காகவும், பால் மாவுக்காகவும் வரிசைகளில் நின்று துன்பப்பட்டனர்.

நமது நாடு நீண்ட காலமாகப் பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கைகளாலும், அந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இலஞ்சம், மோசடி மற்றும் ஊழல்களாலும் நமது நாடு பெரும் பொருளாதார சரிவைச் சந்தித்தது. அன்று, இந்நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்கள் பொருளாதாரத் தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.

அரசியல் நலன்களுக்காகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்காகவும் கட்டுமானம் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்ட, கட்டுமானம் முடிக்கப்பட்டு கைவிடப்பட்ட சுமார் 1800 அரச கட்டிடங்கள் இருப்பதாக அண்மைய அறிக்கை கூறுகிறது. அந்த கட்டுமானங்கள் நாட்டின் தேவைகளின் அடிப்படையில் தொடங்கப்படவில்லை. பிரதேச அமைச்சரின் தேவைகளுக்காக அல்லது நண்பர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்காக அவை ஆரம்பிக்கப்பட்டன. நிர்மாணிக்கப்பட்ட பிறகு பராமரிக்கப்படாத சில கட்டிடங்களும் உள்ளன.

சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமை, அந்தந்த சமயங்களில் அரசியல்வாதிகளின் தேவைகள், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இந்த வீழ்ச்சி இன்னும் முடிவடையவில்லை. பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க எவ்வளவு செலவாகும் என்பதைக் கண்டறிய அண்மையில் நான் ஒரு அறிக்கையை கோரினேன். 43 பாரிய திட்டங்களில், 20 திட்டங்கள் குறித்து கண்டறியப்பட்டன. அந்த 20 திட்டங்களும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு 30,000 கோடி ரூபா செலவாகியிருக்கும். ஆனால் இப்போது 61,000 கோடி ரூபா செலவிட வேண்டியுள்ளது. எனவே புதிய மதிப்பீடு இரட்டிப்பாகியுள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை நாம் இன்னும் அனுபவித்து வருகிறோம்.

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற பிறகு, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதே எமது முதன்மையான பணியாக மாறியது. அது இல்லாமல், சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வீதிக்கட்டமைப்பு பற்றி சிந்திக்கவே முடியாமல் போனது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்த நாட்டின் பொருளாதாரம் பல முக்கிய காரணிகளால் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாடாக நாம் அடையும் இந்த பொருளாதார வெற்றிகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். ஆனால் வரலாற்றில் நடந்திருப்பது என்னவென்றால், பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றி குவிந்துள்ளன, மேலும் அந்தக் குடும்பங்களைச் சுற்றி திருடர்கள் கூட்டம் உள்ளது.

மக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் பெற்றுக் கொள்ளும் எண்ணம் எமக்குக் கிடையாது. நாட்டின் பொருளாதார வெற்றிகளை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும். எனவே, இந்த ‘டித்வா’ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதே எமது இலக்காகும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வீடுகளை நிர்மாணிக்கவும், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவு எமக்குக் கிடைக்கிறது. அதேபோல், பல தனியார் தொழில்முனைவோரும் எமக்கு உதவி வருகின்றனர். அனைவரது ஒத்துழைப்புடன் இந்த மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

ஆட்சியாளர்கள் என்ற வகையிலும் அரச ஊழியர்கள் என்ற வகையிலும் நம் அனைவரினதும் பொறுப்பு இதுவேயாகும். நாம் பொதுமக்களின் பணத்தில்தான் கல்வி கற்றோம். எனவே, நாம் அவர்களுக்குத் திரும்பப் பணியாற்ற வேண்டும். இந்த ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் மத்தியிலும் ஒரு நாடாக விரைவாக எழுச்சிபெற எம்மால் முடிந்துள்ளது. இதற்காக அரச அதிகாரிகள் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார அபிவிருத்தியே எமக்கு மிக முக்கியமானது . அதேபோல், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். அதனை நாம் நிச்சயமாகச் செய்வோம். இதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

நீதித்துறைக் கட்டமைப்பு, சட்ட விசாரணை நிறுவனங்கள், சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற நிறுவனங்களில் பாரிய வீழ்ச்சிகள் காணப்பட்டன. அந்த நிலையை மாற்றி அந்த நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உயர் சம்பளத் தளத்தை அமைத்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், அந்த ஆணைக்குழுவிற்கு நேரடியாக அதிகாரிகளை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பொறிமுறையும் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்றே சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிறுவனக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடமையாக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிக விரைவில் திருத்தப்பட்டு, தேவையான சட்டங்கள் கொண்டுவரப்படும். அத்துடன், திட்டமிடப்பட்ட அடிப்படையிலான குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான சட்டங்களை உருவாக்கி வருகிறோம். பணமோசடியைத் தடுப்பதற்கான சர்வதேச தரத்திலான சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. நாட்டை ஒரு நாகரீகமான நிலைக்குக் கொண்டுவரத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் நிறுவன வலுவூட்டல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சட்டத்தின் கோட்டிற்கு கீழே இந்த நாட்டின் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. அத்தகைய ஒரு நாடுதான் எமக்கு அவசியம். அந்த மாற்றத்தை நாம் தற்போது செய்து வருகிறோம். இந்த மாற்றத்தினால் நியாமானவர்களுக்கு எவ்வித வலியும் ஏற்படாது, ஆனால் தவறு செய்பவர்களுக்கு வலிக்கும். அனைவருக்கும் நாட்டைப் பற்றி நல்லெண்ணங்கள் உள்ளன.

நல்லெண்ணம் இருந்தாலும் செயற்பாட்டில் இறங்கும் போது அந்த நல்லெண்ணங்கள் இயல்பாக வெளிப்படாது. அந்த நல்லெண்ணங்களை மட்டும் பெற்றுக்கொள்ளவே நாம் அனைவரும் பாடுபடுகிறோம்.

யார், எப்பொழுது, எந்தப் பதவியில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் நாம் சட்டத்தின் முன் நிறுத்துவோம். அந்த வகையில், இலங்கையில் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதில் மக்கள் அதிக நம்பிக்கைகொள்ளும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என நான் கருதுகிறேன். அதற்காக எதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம்.

சட்டம் தங்கள் மீது கை வைக்காது எனச் சிலர் நினைத்தார்கள். தங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு கதிர்கள் சட்டத்தை சுட்டெரிக்கும் என்று கருதினார்கள். அவர்கள் எவ்வளவு ‘பெரிய மனிதர்களாக’ இருந்தாலும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம். சட்டம் என்பது ‘பெரிய மனிதர்களுக்கு முன்பாக சிலந்தி வலை’ போன்றது என்று கூறப்பட்டதுண்டு. அந்த சிலந்தி வலையில் இனி பெரியவர்களும் சிக்கிக்கொள்வார்கள். சட்டம் தங்களை நெருங்கும்போது தற்போது அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் பெரியவர், சிறியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமின்றி சட்டம் அனைவரையும் சென்றடையும் . எனவே, குற்றவாளிகள் மட்டுமே அச்சப்பட வேண்டும், நல்ல மனிதர்கள் அல்ல. தவறு செய்தால் அது காலப்போக்கில் மறைந்துவிடாது. எப்போதாவது ஒருமுறை அதற்கான தண்டனை கிடைக்கும் என்பதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் புரிய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே எதிர்காலச் சந்ததியினர் ஒரு நாகரீகமான நாடு குறித்து நம்பிக்கைகொள்வார்கள். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுபோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects