கடந்த 2025 ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும், நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம் என அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் தாக்கம் இருந்தபோதிலும், அந்த வருடத்தில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் தாவரவியல் ரீதியான ஈர்ப்புகள் மூலம் கிடைத்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்து, 1.394 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருமானமானது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% உயர்வு எனவும், 2025ஆம் ஆண்டில் சுற்றுலா ஈட்டல்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பூங்காக்களின் பங்களிப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் கீழ் பேராதனை அரச தாவரவியல் பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, கம்பஹா தாவரவியல் பூங்கா, சீதாவக்க ஈர வலய தாவரவியல் பூங்கா, மிரிஜ்ஜவில வறண்ட வலய தாவரவியல் பூங்கா மற்றும் கணேவத்த வன மூலிகைத் தோட்டம் ஆகியவை நிர்வகிக்கப்படுகின்றன.
இதில், பேராதனை அரச தாவரவியல் பூங்காவிற்கு மாத்திரம் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதோடு, ஒட்டுமொத்தமாக அனைத்துத் தாவரவியல் பூங்காக்களையும் பார்வையிட 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகத் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










