மாணவர் சுதந்திரத்தை ஒருபோதும் மட்டுப்படுத்த மாட்டோம், வன்முறைகளையும் பகிடிவதையினையும் ஒழிக்க மாணவர் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையொன்றின் அவசியத்தை மாணவர் சங்கங்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான கொள்கை வரைபைத் தயாரிப்பதற்குக் குழுவொன்றை நியமிக்குமாறும், அதில் மாணவர் சங்கங்களின் கருத்துக்களை முன்வைக்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடல் 27.02.2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவினர் விரிவாக விளக்கமளித்தனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரத்தை எவ்வகையிலும் மட்டுப்படுத்தப் போவதில்லை எனவும், இது குறித்து எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
மருத்துவப் பட்டம் பெற்றவர்களுக்கான உள்ளகப் பயிற்சியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தங்குமிடப் பிரச்சினைகளே பிரதான காரணம் எனவும், இதற்குத் தீர்வுகாணச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்ளகப் பயிற்சியை மேலும் விரிவுபடுத்துவதற்காக மேலதிகமாக ஐந்து வைத்தியசாலைகளுக்கு அங்கீகாரம் கோரப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
வயம்ப, குருநாகல், குளியாப்பிட்டிய, சபரகமுவ மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பல்கலைக்கழக மருத்துவப் பீட மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காணிகளைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த மறுகணமே கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் வலியுறுத்தினர். அத்தோடு, குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பீடங்களில் பயிற்சியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மருத்துவப் பீடங்களின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், பயிற்சிக்குப் பின்னரான நியமனங்களை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் மற்றும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் அழைப்பாளர் நவோத்ய மாரசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










