பெண் வலுவூட்டலுக்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தலைமைத்துவ விருது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ‘ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் 10.03.2026 அன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேய கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார். இத்துறையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது எனவும், இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல், வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமவாய்ப்புகளைக் கொண்ட கல்வி முறையைப் பேணுதல் ஆகியன நிலையானதும் நீதியானதுமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு “ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது” (Shireen Lateef Women’s Leadership Award) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(பிரதமர் ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects