மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராயும் கலந்துரையாடல் 16.03.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்தார்.
தொடர்புள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலைமையில் அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.
அரச அலுவலகங்களை செயற்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய மாற்றுவழிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு அரச ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதன் ஊடாக வலுசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்தி சேவைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில், விவசாயம், துறைமுகம், விமான நிலைய சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் வகையில் அந்த சேவைகளை முன்னெடுப்பத்திற்கு தற்பொழுது மேற்கொள்ளக் கூடிய மாற்றுவழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
முக்கிய துறைகளில் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட வேண்டிய எரிபொருளின் அளவைத் தீர்மானிப்பதற்கு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அந்தந்தத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் இன்றைய தினத்திற்குள்ளேயே அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
அத்துடன், இத்தகையதொரு சூழ்நிலையில் வீட்டிலிருந்து பணியாற்றுவதன் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சு மட்டத்திலான தீர்மானங்களை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதிகாரிகளை பணியிடத்திற்கு அழைக்கப்படுவது குறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைப்பதற்கும், சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லப் பொருத்தமான முறையொன்றைப் பின்பற்றுவதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் கைத்தொழில் துறையிலுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் விசேட கவனம் திரும்பியது.
தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு அனைவரினதும் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்றும், அதன் ஒரு கட்டமாக ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மானிய முறைகள் மூலம் வசதிகளை வழங்க நேரிடும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
சவால்களுக்கு மத்தியில் தினசரி எரிபொருள் நுகர்வை முகாமைத்துவம் செய்வதே QR முறைமையை அறிமுகப்படுத்துவதன் நோக்கமாகும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதன் மூலம் நாளாந்தம் பெறப்படும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொருளாதார மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக எரிபொருளை விநியோகிப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தில் QR முறைமையை முறையாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், அதற்காக ஒவ்வொரு அமைச்சு மட்டத்திலும் தேவையான அனைத்துத் தரவுகளையும் விரைவாக டிஜிட்டல் விவகார அமைச்சிடம் வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து QR முறைமையை மேலும் முறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டது.
மேலும், நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு அரச வைபவங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கும், இது தொடர்பில் அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தனியார் துறைக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் இங்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோருடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…
![]()










