06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 இல் ஆரம்பிக்கத் தயார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழுவில் வலியுறுத்தப்பட்டது. 

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 17.03.2026 அன்று பாராளுமன்றத்தில் கூடியது. 

இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, 

2026ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்கள் இனிவரும் காலங்களில் கண்காணிக்கப்படும். 

முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான செயற்பாடுகள் அடங்கிய நூல்களை அச்சிடுவதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாம் தவணைக்கான செய்முறைச் செயற்பாட்டு நூல்களை ஏப்ரல் பாடசாலை விடுமுறையின் பின்னர் மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார். 

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், 6ஆம் தரத்திற்குரிய அனைத்துப் பாட அலகுகளும் விசேட குழுக்கள் ஊடாக ஆழமாக மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். 

மதிப்பீடுகள் மற்றும் பெறுபேறு கணிப்பீடுகள் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச வளவாளர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த வளவாளர்கள் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையக் கல்வி தொடர்பான ‘தேசிய வழிநடத்தல் குழுவை’ நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான வழிநடத்தல் குழுக்களை நியமிப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டது. 

இக் கலந்துரையாடலில் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects