ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 2026 PAX இன்டர்நெஷனல் ரீடர்ஷிப் விருது வழங்கல் நிகழ்வில் (PAX International Readership Awards 2026), ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெற்காசிய பிராந்தியத்துக்கான விமான நிறுவன பிரிவில் இரண்டு முக்கிய விருதுகளை வென்றுள்ளது.
“சிறந்த ஒட்டுமொத்த பயணிகள் அனுபவம் – தெற்காசியா” (Best Overall Passenger Experience – South Asia) மற்றும் “மிகவும் மேம்படுத்தப்பட்ட விமான நிறுவனம் – தெற்காசியா” (Most Improved Airline – South Asia) ஆகிய விருதுகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனதாக்கிக்கொண்டுள்ளது.
உணவுச் சேவை, விமானத்தில் வழங்கப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இருக்கை வசதி என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் மற்றும் செயலியில் (App) AI தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன மாற்றங்களைச் செய்ததன் மூலம் பயணிகளுக்கு எளிதான முன்பதிவு வசதிகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுயாதீன செக்-இன் (Self-check-in) மற்றும் பொதிகளை ஒப்படைக்கும் (Bag drop) வசதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சுவைகளுடன் இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளையும் இணைத்து, இலங்கைக்கே உரித்தான விருந்தோம்பலுடன் பயணிகளுக்குச் சேவையாற்றப்படுகிறது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது 61 நாடுகளில் உள்ள 120 இடங்களுக்குத் தனது சேவையை வழங்குகிறது.
இந்த வெற்றி குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டு மேலாளர் மரியா சதாசிவம் கூறுகையில்,
“எங்களது சேவைக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு அங்கீகாரமாகவே இதைக் கருதுகிறோம்.
பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும், அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள இந்த விருது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது…” எனத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் (Airbus) ரகத்தைச் சேர்ந்த A330-200/300 மற்றும் A320/321 விமானங்களைக் கொண்டு தனது சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










