எலிக் காய்ச்சல் மற்றும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் சிகிச்சைகளுக்காக 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு நவீன மருத்துவ உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதிநவீன இரத்த பிளாஸ்மா பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் ‘Com.Tec MultiProcedural Machine’ என்ற இவ்விரு மருத்துவ உபகரணங்களையும் ‘பிரீமியம் இன்டர்நெஷனல்’ தனியார் நிறுவனம் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் இந்த உபகரணங்கள் அண்மையில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மூலம்இ பிளாஸ்மா பெரெசிஸ் சிகிச்சை முறை ஊடாக நாட்டில் பரவலாகக் காணப்படும் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
குறிப்பாக, எலி காய்ச்சல் மற்றும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்தல்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் நோயாளர்களுக்குத் தேவையான விசேட கவனிப்பை வழங்குதல்.
இரத்தப் புற்றுநோய் மற்றும் தலாசீமியா நோயினால் பாதிக்கப்பட்டு, உயிரணு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு சிகிச்சையளித்தல் ஆகியவற்றுக்கு இவ்வுபகரணங்கள் நேரடியாகப் பங்களிப்புச் செய்யவுள்ளன.
நாட்டின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதே தமது நிறுவனத்தின் முதன்மைக் குறிக்கோள் எனஇ உபகரணங்களை அமைச்சரிடம் கையளித்த பிரீமியம் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் மஹேஷ் பெர்னாண்டோ மற்றும் பொது முகாமையாளர் அசல மோசஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
இங்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கயில்,
நாட்டில் நடைமுறையிலுள்ள இலவச சுகாதாரச் சேவையைத் தொடர்ச்சியாகவும் முறைப்படியாகவும் முன்னெடுத்துச் செல்வதற்காக, அரசாங்கம் வருடாந்தம் பெருந்தொகை நிதியை மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகச் செலவிடுகிறது.
அரசாங்கத்தின் இந்தச் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு இவ்வாறான நன்கொடைகள் மிக முக்கியமானவை எனக் குறிப்பிட்டதுடன், நிறுவனத்தின் பிரதானிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றியையும் தெரிவித்தார்.
தேசிய இரத்த மாற்றுச் சேவை ஊடாக ஏற்கனவே இது போன்ற 19 உபகரணங்கள் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, அதன் மூலம் வருடாந்தம் பெருமளவிலான நோயாளர்கள் பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










