குற்றவியல் நீதித்துறை செயல்முறைகளுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பது தொடர்பான இரண்டு நாள் தெற்காசிய பிராந்தியக் கூட்டம் 2026 மே மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நேபாளத்தின் நாகர்கோட்டில் நடைபெற்றது.
இக்கூட்டம் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் (UNODC) நேபாள தேசிய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ரீனா பத்தக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
UNODC ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் நேபாளம், இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரச நிறுவனங்கள், சட்ட அமுலாக்கப் பிரிவுகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் UNODC பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மனித வியாபாரய்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனுபவங்கள், சவால்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து பங்கேற்பாளர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
“தெற்காசியாவில் மனித வியாபாரம் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலைத் தடுப்பதும் எதிர்கொள்வதும்” என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் இப்பிராந்தியக் கூட்டம் நடைபெற்றது.
குற்றவியல் நீதித்துறை அமைப்புகளுக்குள் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய மற்றும் உளவியல் பாதிப்புகளை கருத்திற் கொண்ட அணுகுமுறைகளை வலுப்படுத்துவது இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
தொடக்க நிகழ்வில் நேபாளத்திற்கான UNODC திட்ட அலுவலகத்தின் தலைவர் திரு. அல்ரிச் மைசர், நேபாள காவல்துறையின் மனித கடத்தல் எதிர்ப்பு பணியகத்தின் தலைவர் திரு. கிருஷ்ண பிரசாத் பகேனி மற்றும் நேபாளத்தின் பிரதி சட்டமா அதிபர் திரு. சஞ்சீவ் ராஜ் ரெக்மி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆரம்ப உரைகளை வழங்கினர்.
மனித கடத்தலுக்கு உள்ளானவர்களுக்கு குற்றவியல் நீதித்துறை செயல்முறைகளில் எதிர்கொள்ளப்படும் கட்டமைப்பு மற்றும் நடைமுறை சவால்களை அடையாளம் காணுதல், பிராந்திய அனுபவப் பகிர்வு, சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல், பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பொறிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் நீதித்துறை அதிகாரிகளிடையே பாதிப்பு உணர்வுடன் செயல்படும் அணுகுமுறைகளை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய மற்றும் பிராந்திய மட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான முன்னுரிமைப் பகுதிகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டன.
இக்கூட்டத்தில் தெற்காசிய பிராந்திய UNODC அலுவலகத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி அனுஷா முனசிங்க ம்ற்றும் அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் ப. முரளிதரன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










