ஈஸ்டர்ன் ஃபாக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தினால் உருவாக்கப்படவிருக்கும் புதிய திரைப்படத்திற்கான பொதுவான பூஜை நிகழ்வு 09.06.2026 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்திலும், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய ரஜமஹா விகாரையிலும், மொசாப்பிட்டி தர்கா பள்ளிவாசலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
றொஜஸ் டீ சில்வா தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ம.பிரதிஜன், கதாநாயகியாக தனுஷ்கா ரமேஷ் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் ப.முரளிதரன் ஆகிய முதன்மை கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் பூஜை நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் தேவா அலோசியஸ், ரகுதாஸ், துஷ்யந்தன், திரேசா போன்ற நடிகர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து திரைப்படத்தின் பெயர் #இமு என அறிமுகப்படுத்தப்பட்டதுடன் திரைப்படத்தின் முழுப்பெயர் திரைப்பட முதல் பார்வை வெளியீட்டின் போது வெளியிடுவதாக இயக்குநர் தெரிவித்தார். அத்துடன் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிருஷாந்த், இசை மற்றும் இயக்கம் கதை, திரைக்கதை என்பன கீ.கிஷாந், பாடலாசிரியராக அபிலாஷ் ஆகியோர் பணியாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சார்பில் அவரது தாய் மற்றும் தந்தை கலந்து கொண்டதுடன் படத்தில் பணியாற்றவிருக்கும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தயாரிப்பாளரின் தாயாரால் படத்தின் படப்பிடிப்பு கிளாப்பர் அடிக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










