இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் துணி மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானம் 1,624.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,751.8 மில்லியன் டெலர்களாகக் காணப்பட்டது.
இதன் மூலம் துணி மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானம் 7.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் சற்று அதிகரித்துள்ளது.
4,534.9 மில்லியன் டொலர்கள் வரை சற்று அதிகரித்துள்ளது. இந்த வருமானமானது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,315.6 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.
எவ்வாறாயினும், இக்காலப்பகுதியில் இறக்குமதிச் செலவினம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் 6,572.9 மில்லியன் டொலர்களாக இருந்த இறக்குமதிச் செலவு, 2026 ஆம் ஆண்டில் 8,227.9 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
இது 25.2 சதவீத வளர்ச்சியாகும். இதில் நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி 32.8 சதவீதத்தாலும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதி 24.1 சதவீதத்தாலும், முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதி 19.8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, ஏற்றுமதி வளர்ச்சியை விட இறக்குமதிச் செலவு வேகமாக அதிகரித்ததன் காரணமாக, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 3,693 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை விரிவடைந்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










