கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசேட சோதனைகளை மேற்கொள்ளும் மூன்று நாள் தீவிர ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (24.06.2026 ) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் இலங்கை விமானப்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் இணைந்து இந்த விசேட கூட்டுப் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இது குறித்து கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.பி.எஸ்.சாந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் அமைச்சர்களான நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரின் தலைமையில் டெங்கு ஒழிப்புத் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே, கொழும்பில் அதிக டெங்கு அபாயமுள்ள வலயங்களை இலக்கு வைத்து இந்த விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பலத்த மழைப்பொழிவைத் தொடர்ந்து கொழும்பு நகரில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிட முடியாத மருத்துவமனை வளாகங்கள், உயரமான கட்டிடங்களின் கூரைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விஹாரமஹா தேவி பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகள் வான்வழியாக ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள விசேட வெப்ப உணரி தொழில்நுட்பம் மூலம் நீர் தேங்கியுள்ள இடங்கள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
இதன்போது, பொரள்ளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தம்மிக கருத்து தெரிவிக்கையில்,
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வாராந்தம் தத்தமது பிரதேசங்களை சோதனை செய்து, மாதாந்த அறிக்கையை சுகாதார அதிகாரி அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச நிறுவன வளாகங்களிலேயே அதிகளவில் டெங்கு நுளம்புப் பெருக்கம் கண்டறியப்பட்டு வருகிறது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வீடுகளில் டெங்கு நுளம்புகள் கண்டறியப்படும் வீதம் 1 க்கும் குறைவாக உள்ள போதிலும், வீடுகளைச் சோதனையிடும் போது, சுற்றியுள்ள பொது இடங்கள், நிறுவன வளாகங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகளிலேயே நுளம்புகள் பெருகுவதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பொது இடங்களை அசுத்தப்படுத்துவதற்கும் பொதுமக்களே பொறுப்புக்கூற வேண்டும். நாம் வீசும் வெற்றுப் போத்தல்கள் மற்றும் யோகட் கோப்பைகள் போன்றவற்றைச் சரியான முறையில் அகற்றுவதன் மூலம் கொழும்பு நகரில் டெங்குப் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். சுகாதார விதிமுறைகளை மீறி நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










