“உங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் லைஃப் லைன்” எனும் தொனிப்பொருளில் பெரெண்டினா நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி கிளையின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயளாலர் வி.துளாஞ்சனன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவினையும் வழங்கி வைத்துள்ளார்.
பெரெண்டினா தன்னார்வ மற்றும் நிதி நிறுவனத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மாவட்டத்தில் போசாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு செயற்றிட்டம் பெரண்டினா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் 13000 த்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட இந் நிறுவனத்தினால் வாழைச்சேனை , செங்கலடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களிற்கு மொத்தமாக 45 மில்லியன் ரூபாய் நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இந் நிறுவனத்தினால் மாவட்டத்தில் உணவு தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதன் மூலம் தமது அன்றாட உணவு தேவையை புர்த்தி செய்வதற்கான உதவிகள் செய்துவருவது மட்டுமல்லாது செய்கைக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வின் போது பெரெண்டினா நுண்நிதி நிறுவன பிரதேச முகாமையாளர் பா.பிரதிபன், களுவாஞ்சிக்குடி கிளை முகாமையாளர், பா.விதுர்ஷனா மற்றும் அக்கரைப்பற்றுக் கிளை முகாமையாளர்கள் பா.திலிபன், பயனாளிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்று இடம்பெற்ற முதற்கட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் 40 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.