2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் 2021 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த மாணவத் தாதியர்களுக்கு தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வு 25.06.2026 அன்று அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
அத்துடன், 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,949 பேருக்கும், ஒகஸ்ட் மாதத்தில் 2,920 பேருக்கும் தாதியர் நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
2030 ஆம் ஆண்டளவில் தாதியர் சேவைக்காக 13,600 பேரை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அந்த இலக்கில் 50% ஐ இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தாதியர் சேவையில் இணையும் அனைவரதும் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வரும் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து தற்பொழுது திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் இலவச சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதில் தாதியர் சேவை மிகவும் முக்கியமானது எனவும், இது ஒரு கௌரவமான தொழில் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில், முதலாம் ஆண்டு செய்முறைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவத் தாதியர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சம்பத் இந்திக்க குமார, தாதியர் பணிப்பாளர்கள், தாதியர் சபையின் தலைவர், கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாணவத் தாதியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










