FRIENDS OF 93 எனப்படும் 93 நண்பர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருட்டுச்சோலைமடு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்கு 12 சோடி சப்பாத்துகள், காலுறைகள் மற்றும் ஒரு தொகுதி பாடசாலைச் சீருடைத் துணி என்பன 07-07-2026 அன்று பாடசாலை அதிபர் கு.பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டு பின்னர் அவை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
பொருளாதார ரீதியில் சவால்களுக்கு மத்தியிலும், கல்வியைத் தொடரும் இந்த மாணவர்களின் சப்பாத்து இல்லாத துன்ப நிலையை விளக்கி அண்மையில் அப்பாடசாலை ஆசிரியை அல்லி பிரபாகரன் என்பவரால் இடப்பட்ட முகநூல் பதிவை கருத்திற்கொண்டு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
93 நண்பர்கள் அமைப்பின் சார்பில் ச.சக்தீஸ்வரன், ஜே. கசியஸ் ஹென்றிக் மற்றும் ப.முரளிதரன் ஆகியோர் நேரில் சென்று இப்பொருட்களைக் கையளித்தனர்.
இதன் போது அங்கு உரையாற்றிய சக்தீஸ்வரன், 93 நண்பர்கள் அமைப்பு என்பது 1990 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரத்திலும், 1993 ஆம் ஆண்டு உயர்தரத்திலும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி மற்றும் சிவாநந்தா வித்தியாலயம் என்பவற்றில் கல்விகற்ற நண்பர்கள் ஒன்றிணைந்த அமைப்பு எனவும், கொரோனா காலம் முதல் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் நண்பர்களின் நிதிப்பங்களிப்பில் கல்வி ஊக்குவிப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் உட்பட பல்வேறு மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










