கடந்த 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், இலங்கையின் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
புதிய பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் 13.07.2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் உயிருடன் பிறக்கும் குழந்தை எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடையும் போக்கைக் காட்டி வருகின்றது.
இந்த வீழ்ச்சி 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் தெளிவாகத் தெரிவதுடன், ஒட்டுமொத்தமாக 2019 – 2025க்கு இடைப்பட்ட காலத்தில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 33% இனால் குறைந்துள்ளது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டில் இலங்கையில் பதிவான மொத்த உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 319,010 ஆகும்.
இந்த மதிப்பானது 2020 ஆம் ஆண்டளவில் 301,706 ஆகவும், 2021இல் 284,848 ஆகவும், 2022இல் 275,321 ஆகவும், 2023இல் 247,900 ஆகவும், 2024இல் 220,761 ஆகவும், கடந்த ஆண்டான 2025 ஆம் ஆண்டளவில் 214,570 ஆகவும் படிப்படியாகக் குறைந்துள்ளது.
இந்நிலைக்குக் காரணங்களாகப் பல முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருமண வயது அதிகரிப்பு, திருமண விகிதம் குறைவடைதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இனப்பெருக்க வயதிலுள்ள பெருமளவிலான இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் காரணமாகத் தம்பதியினர் தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலத்திற்குவோ பிரிந்திருத்தல், சிறிய குடும்பங்களுக்கான விருப்பம், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்கள் இதில் அடங்கும்.
இதுதவிர, குடும்பத்தின் அளவு மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சரியான காலம் குறித்த மனப்பான்மைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளின் பயன்பாடு அதிகரிப்பு, மலட்டுத்தன்மை மற்றும் மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் போன்றவையும் இதற்குப் பங்களித்துள்ளன.
எவ்வாறாயினும், நீண்ட காலத்திற்கு மக்கள் தொகையைப் பேணுவதற்கு இலங்கையில் பராமரிக்கப்பட வேண்டிய உகந்த பிறப்புகளின் எண்ணிக்கை வருடத்திற்கு சுமார் 330,000 – 360,000 ஆகும்.
ஆனால் கடந்த ஆண்டைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த மதிப்பு 214,570 என்ற உகந்த மட்டத்தை விடக் குறைவான மட்டத்திலேயே உள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










