மாகும்புர பன்முகப் போக்குவரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு!

மாகும்புற பன்முகப் போக்குவரத்து மையத்தின் (Makumbura Multimodal Transport Center) உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று (25.08.2026) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், பயணிகள் பேருந்து மற்றும் புகையிரத பயண அட்டவணைகள் உட்பட நாட்டின் ஏனைய பன்முகப் போக்குவரத்து மையங்கள் தொடர்பான முக்கிய தகவல்களைப் குறித்த இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்புதிய டிஜிட்டல் தளத்தின் சிறப்பம்சமாக “MAKU” எனும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பயணியர் உதவிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் தமக்குத் தேவையான தகவல்களை மிக இலகுவாக அணுக முடியும். போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனப்படுத்தி, பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை அமைந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்வில் பேருந்து முனையங்கள் மற்றும் வாகனக் கூட்ட மேலாண்மைக்கான புதிய அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேருந்துகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வசதிகள் விரைவில் ஒருங்கிணைக்கப்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள ‘Park and Ride’ (வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்) முறைமை குறித்து மதிப்பாய்வு செய்த அதிகாரிகள், அதன் பயன்பாடு மற்றும் புகை உமிழ்வு குறைப்பினால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்த தரவுகளைச் சமர்ப்பித்தனர்.

அத்துடன், இயந்திரவியல் கார்களுக்கான தரிப்பிடங்கள் (Mechanical Car Parks) போன்ற புதிய கண்டுபிடிப்புகளுடன் இம்முறைமையை மேலும் விரிவாக்குவதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

பேருந்து இலக்கங்கள், பயணிகளின் எண்ணிக்கை, நெரிசல் மிக்க மற்றும் சாதாரண நேரங்கள், வருகை தாமதங்கள் போன்ற விரிவான தகவல்களை உள்ளடக்கிய பயணியர் போக்குவரத்து தரவு அமைப்பும் (Passenger Transport Data System) உருவாக்கப்பட்டுள்ளது.

இத்துறையில் எதிர்காலத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இத்தரவுகள் மிகவும் முக்கியமானவை எனப் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

புகையிரதச் சேவை, தூரப் சேவைப் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள் என்பவற்றை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து மையங்கள், தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரசாங்கத்தின் வரவிருக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் இவ்வாறான மையங்களுக்கு முதன்மை இடம் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects