5 பில்லியன் டொலர் டிஜிட்டல் ஏற்றுமதி இலக்குக்காக மூலோபாய வரைபடம் தொழிற்துறையுடன் மீளாய்வு!

இலங்கையின் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் ஏற்றுமதி வருமானத்தை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள மூலோபாய வரைபடத்தை மீளாய்வு செய்வதற்கும், அது குறித்து தொழிற்துறையினரிடையே இணக்கத்தை உருவாக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “The Road to US$5 Billion” தேசிய செயலமர்வு 31.07.2026 அன்று கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech Sri Lanka ஆகியவை உலக வங்கிக் குழுமத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.

செயலமர்வின் ஆரம்ப உரைகள், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் GovTech Sri Lanka தலைவர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் IFC இன் முதன்மைக் கள அதிகாரி விக்டர் அந்தோணிப்பிள்ளை ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன.

உலக வங்கிக் குழுமத்தின் தொழில்நுட்ப உதவியின் கீழ், KPMG நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை மற்றும் முன்மொழியப்பட்ட மூலோபாய வரைபடம் ஆகியவை நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech Sri Lanka மற்றும் தொழில்துறை அபிவிருத்திக்குழு ஆகியவற்றின் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட இந்த வரைபடம் தொடர்பில், தொழில் துறையினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதே இந்த செயலமர்வின் முக்கிய நோக்கமாகும்.

மனித வளங்கள் மற்றும் எதிர்காலத்திற்குப் பொருத்தமான திறன் அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் சுயாதீன தொழில் நிபுணர்களை வலுப்படுத்தல், உலகளாவிய சந்தைப் பிரவேசம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி அத்துடன் நிலைபேறான வளர்ச்சிக்கு அவசியமான கொள்கைகள், முதலீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு குழு கலந்துரையாடல் அமர்வும் இங்கு இடம்பெற்றன.

அதன்போது, அறிக்கையின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை மீளாய்வு செய்வதற்கு மேலதிகமாக, அடையாளம் காணப்படாத இடைவெளிகள், புதிய ஆலோசனைகள், செயற்படுத்தும் முன்னுரிமைகள், நிறுவனப் பொறுப்புகள், முன்னேற்றத்தை அளவிடும் குறிகாட்டிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடைமுறைப் பங்களிப்பு குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் டிஜிட்டல் தொழில்துறையை உலகளாவிய ரீதியில் நிலைநிறுத்துதல், செயற்கை நுண்ணறிவு காரணமாகத் தொழில்துறையின் வர்த்தக மாதிரிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், புலமைசார் சொத்து மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்ட உயர் பெறுமதிமிக்க ஏற்றுமதிகளை வளர்த்தல் மற்றும் உள்நாட்டுப் புத்தாக்கங்களை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மூலோபாய வரைபடம், இலங்கையின் டிஜிட்டல் தொழில்துறையின் சர்வதேச போட்டித் தன்மையை உயர்த்தல், தரமான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முயற்சியாளர் வாய்ப்புகளை விரிவுபடுத்தல், உள்நாட்டு டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லல், இலங்கையை பிராந்தியத்தின் முன்னணி டிஜிட்டல் பொருளாதாரமாக நிலைநிறுத்தவும் ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பாட்டு சட்டகமொன்றை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயலமர்வில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை உள்ளடக்கி இந்த வரைபடம் மேலும் மேம்படுத்தப்படவுள்ளதுடன், முன்னுரிமை நடவடிக்கைகள், பொறுப்புக்கூறும் நிறுவனங்கள், செயற்பாட்டுக் காலக்கெடு மற்றும் முன்னேற்றத்தை அளவிடும் குறிகாட்டிகள் என்பவற்றைத் தெளிவாக அடையாளம் கண்டுகொண்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்குவதே இதன் அடுத்த கட்டமாகும்.

இந்த நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க,பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் முன்னணி நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் வர்த்தக சங்கங்கள், புத்தாக்க தொழில்முயற்சியாளர்கள், ஆரம்ப வர்த்தகங்கள், முதலீட்டாளர்கள், சுயாதீன தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அபிவிருத்தி தரப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects