இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதையும், நாட்டைச் செயற்கை நுண்ணறிவு (AI) மையமாக நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய தேசிய முன்முயற்சியைக் குறிக்கும் “Sri Lanka AI Week 2026” பற்றிய உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பு 05.08.2026 அன்று நடைபெற்றது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech Sri Lanka மற்றும் SLT-MOBITEL ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த முதன்மை நிகழ்வு, 2026 செப்டடெம்பர் 28 முதல் ஒக்டோபர் 04 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, “Sri Lanka AI Week 2026” இணையதளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தனது சிறப்புரையை ஆற்றிய பிரதி அமைச்சர் வீரரத்ன, மனித வளர்ச்சி கற்காலத்திலிருந்து தகவல் யுகம் வழியாக தற்போதைய “IQ யுகத்திற்கு” பரிணமித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். உலகளாவிய தொழில்நுட்பத்தை வெறுமனே நுகர்பவராக இருப்பதை விடுத்து, AI தீர்வுகளை உருவாக்கும் தீவிர உற்பத்தியாளராக இலங்கை மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், 5 பில்லியன் டொலர் தொழில்நுட்ப ஏற்றுமதி வருவாய் என்ற தேசிய இலக்கை அடைவதற்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) அடிப்படையாகக் கொண்ட AI திறன்களுடன் உள்ளூர் தகவல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவது மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதலாவது தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டின் (National AI Exhibition and Summit) வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் நிகழ்வு பிராந்திய மற்றும் உலகளாவிய பங்காளிகளின் பங்கேற்புடன் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
“AI Amplified” என்ற கருப்பொருளின் கீழ், Sri Lanka AI Week 2026 மூன்று முக்கிய தூண்களைக் கொண்டிருக்கும்: உலகளாவிய போக்குகள் மற்றும் மூலோபாய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச மாநாடு , உள்ளூர் மற்றும் சர்வதேச கண்டுபிடிப்பாளர்களின் அதிநவீன தீர்வுகளை முன்வைக்கும் ஒரு தொழில்நுட்பக் கண்காட்சி , மற்றும் இலங்கையின் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சிறந்த திறமைகளை அங்கீகரிக்கும் ஒரு விருது வழங்கும் விழா.
மேலும், கொழும்புக்கு அப்பால் நாடு முழுவதும் AI தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான அமைச்சின் பார்வையை பிரதி அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். இது DIGIECON 2030 மற்றும் SLUDI திட்டங்களின் கீழ் இறைமையுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பால் ஆதரிக்கப்படும் என்றும், ஒரு பிரத்யேக தேசிய AI நிறுவனத்தை (National AI Institute) நிறுவுவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










