விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்!

புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நேரடியாகப் பங்களிக்க வேண்டும்

– ஜனாதிபதி

புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்கவும் மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை உயர்த்தவும் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை உருவாக்க உதவியதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலமே மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதம் மாறுகிறது என்றும், அதனைச் சரியாக அடையாளம் காண்பவர்களே எதிர்கால உலகை வெல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் 05.08.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை வழங்குவதற்கான முறைமையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைச்சரவை மட்டத்தில் ஏற்கனவே இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ள ஆராய்ச்சிப் பிரிவுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கும்போது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் விசேட பிரிவு ஒன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள 14 நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் (NERDC) கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் யானை வேலி அமைத்தல் மற்றும் குறைந்த செலவிலான சுற்றாடல் நேய கட்டிடங்களை அமைத்தல் போன்ற ஆராய்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC) போன்ற நிறுவனங்களால் வழங்கப்படக்கூடிய பங்களிப்பும் ஆராயப்பட்டது.

விவசாய அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பாடலுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் கருவா சார்ந்த தயாரிப்புகள் குறித்த ஆராய்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டதோடு ஆயுர்வேத தயாரிப்புகள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் தடைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது கொள்முதல் செயல்முறை தொடர்பான சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விஞ்ஞான ஆணைக்குழு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சிற்கு பொருத்தமான ஒரு கொள்கையை தயாரித்து சமர்ப்பித்துள்ளதாகவும், புலமைச் சொத்து தொடர்பான கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தயாராவதற்கான விஞ்ஞானபூர்வமான வரைபடம் (Road Map) வரும் ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளதாகவும், பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளுக்கிடையில் தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டம் ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

காட்டு யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுப்பதற்காக ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ள வெப்ப உணர் கெமரா கட்டமைப்பை பொருத்தும் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

Astro-Tourism போன்ற துறைகள் மற்றும் இயற்கை அனர்த்த நிலைகள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் முந்திரி, நெல், தேயிலை போன்ற விவசாயத் துறை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பதில் செயலாளர் மகேஷ் கம்மம்பில ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects