“Clean Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அந்த செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 12.08.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
“Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் மையமாகக் கொண்டு, முன்னெடுக்கப்படும் கழிவு முகாமைத்துவ புதிய வேலைத்திட்டம் குறித்து உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துவதும், அதற்காக திட்ட முகாமைத்துவப் பிரிவு ஒன்றை ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்தாபிப்பது குறித்தும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
தெரிவுசெய்யப்பட்ட சில நகரங்களை முன்மாதிரியான நகரங்களாக மாற்றுதல் மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கழிவு முகாமைத்துவம், நகர அழகுபடுத்தல், கால்வாய்களைத் துப்புரவு செய்தல், கழிவுநீர்க் கட்டமைப்புகளை நவீனமயமாக்கல், பூங்காக்களை உரிய முறையில் புனரமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக திட்ட முகாமைத்துவ அலகு ஒன்றை ஸ்தாபிப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும் Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் மூன்று தூண்களில் இரண்டான சமூக மற்றும் ஒழுக்குநெறி சார்ந்த விடயங்களுக்கு அதிக கவனம் செலுத்தி, எதிர்வரும் ஆண்டிற்கான செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் “Clean Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் செயலாளரும் அழைப்பாளருமான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (Clean Sri Lanka) எச்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், “Clean Sri Lanka” செயலணியின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









