இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் (Ceylon Chamber of Commerce) ஏற்பாடு செய்யப்பட்ட “டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” தொடர்பாக இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டம் 18.08.2026 அன்று இலங்கை வர்த்தக சம்மேளன கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சுங்க நடவடிக்கைகளைக் காகிதமற்ற (Paperless Document Processing at Customs) முறைமையாக்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணையாக இலங்கை வர்த்தக சம்மேளனம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை திட்டத்தின் மூலம் வர்த்தகத் துறைக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கத்தின் டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மற்றும் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் வகிபாகம் குறித்து சிறப்புரை நிகழ்த்திய, வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான சீவலி அருக்கொட, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இலங்கைச் சுங்கத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, LankaPay நிறுவனத்தினதும் இலங்கைச் சுங்கத்தினதும் அதிகாரிகள் இணைந்து நடத்திய தொழில்நுட்ப அமர்வு ஒன்றும் இங்கு இடம்பெற்றதுடன், அதில் டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன? அதனைப் பெற்றுக்கொள்வதற்கான சரியான முறை மற்றும் சுங்க ஆவணங்களை (Customs Declarations) சமர்ப்பிக்கும்போது அதனை நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் கலந்துகொண்டவர்கள் விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டனர்.
இந் நிகழ்வில் சுங்கப் பணிப்பாளர்களான ருவன் திசேர, சிசிர குமார, வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர்களான டப்ளியு. எல். சி. திலகசிரி, எம். ஏ. பிரேமலால் ஆகியோருடன், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொதுச்செயலாளர் ஷிரான் பெர்னாண்டோ, இலங்கைச் சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள், LankaPay நிறுவனத்தின் பிரதிநிதிகள் உட்பட இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









