தாதியர் தொழிற்கல்வி டிப்ளோமாவோடு முடிவடையக் கூடாது அதனைப் பட்டம் பெறும் நிலைவரை கொண்டுசெல்ல வேண்டும் – பிரதமர்

தற்போதுள்ள கல்வி முறைமை குறித்து அல்லாமல், புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஊடாக உருவாக்கப்படவுள்ள கல்வி முறைமை தொடர்பில் கவனம் செலுத்தி, அனைத்து மாணவர்களுக்கும் பட்டம் பெறுவது வரையிலான பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக உரிய பாடங்கள் முறையாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் அகில இலங்கைத் தாதியர் சங்க அதிகாரிகள் ஆகியோருடன் பாராளுமன்ற வளாகத்தில் 19.08.2026 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தாதியர் தொழிற்கல்வி டிப்ளோமாவோடு முடிவடையக் கூடாது என்றும், அதனைப் பட்டம் பெறும் நிலைவரை கொண்டுசெல்ல வேண்டும் என்றும், அதற்குத் தேவையான உயர்கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை விரைவில் கையளிப்பது தொடர்பிலும், தாதியர் பட்டம் வழங்குவதற்கான கல்விவழி வரைபடத்தைத் தயாரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“கல்வியியல் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரு வழிகளிலும், மாணவர்கள் தமது பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், தொழிலொன்றில் பிரவேசிப்பதற்குமான நடைமுறைகள் வகுக்கப்படுகின்றன.

இவ்விரு வழிகளும் வெவ்வேறானவை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று, அவற்றின் நோக்கங்களும் வேறுபட்டவை. எவ்வாறாயினும், தாதியர் பட்டம் வழங்குவதன் ஊடாகச் சுகாதார முறைமை, கல்வி முறைமை ஆகியவற்றைப் போன்றே தாதியர் சேவையின் தரமும் மேம்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், தொழிற்கல்வி ஊடாகச் சுகாதாரத் துறையின் ஏனைய தொழில்களான பராமரிப்புச் சேவை, முதியோர் பராமரிப்புச் சேவை போன்ற தொழில்களுக்கும் உயர்கல்வி வரை கற்கக்கூடிய வகையில் கல்வி நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் அகில இலங்கைத் தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவஆரச்சி, செயலாளர் எஸ்.பி. மெதிவத்த உள்ளிட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

(பிரதமர் ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects