குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 23.08.2026 அன்று அனுராதபுர மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
லொத்தர் விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும், லொத்தர் விற்பனை உதவியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதாக, முதலாம் வகுப்பு முதல் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி பயிலும் பிள்ளைகளுக்காக இப்புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வடமத்திய மாகாணத்தில் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் 65 பிள்ளைகளுக்கு இன்றைய தினம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன,
ஜனாதிபதி நிதியத்திற்கு இன்று கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயின் பலனும் நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு மட்டுமே உரித்தாகிறது எனச் சுட்டிக்காட்டினார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையிலான 6 மாத காலப்பகுதிக்குள், 22,000 பேரைக் கொண்ட அபிவிருத்தி லொத்தர் விற்பனைப் பிரதிநிதிகள் வலையமைப்பினால் ஜனாதிபதி நிதியத்திற்காக 5,112 மில்லியன் ரூபாய் மாபெரும் நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இதுவரை தங்களது பலத்தை உணராது இருந்த லொத்தர் விற்பனையாளர்கள் தங்களது பலத்தை நாட்டுக்குக் காட்டிய சந்தர்ப்பம் இதுவெனவும், அதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன:
இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது வடமத்திய மாகாணத்திலிருந்தே அதிகளவானோர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு இன்று புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இத்திட்டம் உட்பட ஏனைய புலமைப்பரிசில் திட்டங்கள் வடமத்திய மாகாணத்திற்குள் செயற்படுத்தப்படுவது இத்துடன் நின்றுவிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
50 வருட கால வரலாற்றைக் கொண்ட ஜனாதிபதி நிதியம் உண்மையாகவே மக்களின் நிதியமாக மாறியது கடந்த ஆண்டிலிருந்தே ஆகும். இன்று அது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பிரதேச செயலக மட்டம் வரை பரவலாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியம் என்பது இனி கொழும்புக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு தொலைதூர நிறுவனமல்ல.
கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக மக்கள் மிக இலகுவாக அணுகக்கூடிய உண்மையான மக்கள் நலம் சார்ந்த சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையை உலகிலேயே மிக வேகமாக வளர்ச்சியடையும் நாடாக மாற்றும் தேசிய பணியில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கின்றேன்.
வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க:
அனுராதபுர மாவட்டம் உட்பட பல மாவட்டங்களை எடுத்துக் கொண்டால், அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் கிராமப்புற சூழலில் வளர்ந்தவர்கள்.
இப் பிள்ளைகள் முன்னெறிச் செல்வதற்கான பிரதான பாதை கல்வியாகும். இப் பிள்ளைகளுக்கு நவீன மற்றும் எதிர்கால உலகிற்கு ஏற்ற கல்வி முறையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கனவு அரசாங்கமாக எமக்கு உள்ளது. குறிப்பாகக் கிராமப்புறப் பிள்ளைகளுக்கு உலகை வெல்வதற்கு ஒரு கைத்தாங்கு தேவை. நாம் அனைவரும் ஏதோவொரு கைத்தாங்கின் மூலமே வாழ்க்கையில் வெற்றியடைந்துள்ளோம். எனவே, இன்று இப்புலமைப்பரிசில் மூலம் பிள்ளைகளுக்கு பக்கபலமாக அமைவதோடு முன்னோக்கிச் செல்வதற்கான பாதையும் திறக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் என்ற வகையில் எமது முதன்மை நோக்கம் கிராமப்புற வறுமையை ஒழிப்பதாகும். கிராமப்புற வறுமையை ஒழிக்க வேண்டுமாயின் அப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும். எனவே இத்திட்டம் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சூழலிருந்து வெளியே வந்து உலகை வெல்வதற்கு வாய்ப்பை வழங்கும் என நம்புகிறேன். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் பிள்ளைகளின் கல்வித் திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தி, அவர்களை உலகிற்குப் பொருத்தமான நல்ல தொழில் வல்லுநர்களாகவும் தொழில்முனைவோராகவும் உருவாக்கி கிராமப்புற வறுமையை ஒழிப்பதே நாம் எதிர்பார்க்கும் இலக்காகும்.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே:
தற்போது ஜனாதிபதி நிதியம் நாட்டின் மக்களுக்காகப் பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. அதனால் இப்போது ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியமாக மாறியுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்காகவே செலவிடப்படுகிறது. அத்தகையதொரு புதிய திட்டமே இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஜனாதிபதி நிதியத்திற்குப் பணம் லொத்தர் விற்பனையாளர்களிடமிருந்தே கிடைக்கின்றது. அவர்கள் எப்போதும் ‘நீங்களும் வெல்வீர்கள், நாடும் வெல்லும்’ என்று கூறுவார்கள்.
ஆனால் கடந்த காலத்தில் லொத்தர் விற்பனையாளர்கள் வெல்லவில்லை. அதனால் ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு, ஜனாதிபதி நிதியத்திலிருந்து லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கும் கல்விப் புலமைப்பரிசில் வழங்க வேண்டும் எனத் தீர்மானித்தது.
இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு திட்டமாகும். இதற்காக அதிகளவிலான விண்ணப்பங்கள் வடமத்திய மாகாணத்திலிருந்தே கிடைத்தமையால் நாம் முதல் திட்டத்தை அனுராதபுரத்திற்கு கொண்டு வந்தோம்.
இந் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாநாயக்கார, பி.டி.என்.கே. பலிஹேன, வடமத்திய மாகாண பிரதம செயலாளர் ஜே.எம்.ஆர்.பி. ஜயசிங்க, ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜே. ஆர். பி. ஜயகொடி, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரத நிறைவேற்று அதிகாரி எம்.ஆர்.எச். சுவர்ணதிலக்க, தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவர் எம்.டி. சிறில் அந்தோனி பெரேரா மற்றும் மாகாண அரச அதிகாரிகள், வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








