டித்வா சூறாவளியால் சேதமடைந்த மலையக புகையிரதப் பாதையில், கொட்டகலை முதல் ரதெல்ல வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக திட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கொட்டகலை மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு இடத்தில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய மோசமான வானிலை காரணமாக கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும், இதுவரை திட்டத்தின் சுமார் 60 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வானிலை சீரடைந்து, மழைப்பொழிவு குறைந்தால், கிரேக்லி தோட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் புனரமைப்புப் பணிகளை இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டத்தின் தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









