நாட்டில் ஊட்டச்சத்துப் பிரச்சினையானது, மேலும் தீவிரமான கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் – பிரதமர்

அரச பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம் வெறுமனே குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவசமாக உணவளிப்பதற்கு மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதொன்றாக அமையக் கூடாது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் இடையே 24.08.2026 அன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம் வெறுமனே குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவசமாக உணவளிப்பதற்கு மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதொன்றாக அமையக் கூடாது என வலியுறுத்தியதுடன், ஒட்டுமொத்தப் பாடசாலைக் கட்டமைப்பிலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், நல்ல ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் சரியான சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துதலே இதன் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஊட்டச்சத்துப் பிரச்சினையானது, மேலும் தீவிரமான கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் எனக் குறிப்பிட்ட பிரதமர், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புடன் சரியான உணவுப் பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் கட்டாயத் தேவையையும் தெளிவுபடுத்தினார்.

தற்போது முன்பள்ளிக் குழந்தைப் பருவம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்ப மட்டங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வேகமாகப் பரவிவரும் தொற்றா நோய்களைத் (NCDs) தடுப்பதற்குப் பங்களிக்கும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிதல் அத்தியாவசியம் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான எதிர்காலக் கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும்போது, வெறும் அனுமானங்களின் அடிப்படையில் அன்றி, சரியான அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளைப் பாராட்டிய உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகள், அதற்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். தற்போது இடம்பெற்றுவரும் நேர்மறையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளின் வெற்றிக்குப் பல்கலைக்கழகங்கள், கல்வி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியது.

இக் கலந்துரையாடலில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான பிலிப் வார்ட், பிரதிப் பணிப்பாளர் ரொபர்ட் ஒலிவர், சிட்னி நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜயா ஸ்ரீ அர்காட் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

(பிரதமர் ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects