அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.
கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது.
“சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.
கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் (‘பிரே சம்டெக் பிரே போரோம்நாத் நோரோடோம் சிஹாமோனி’) ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான (‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’) சம்தேச் அக்கா மோக சேனா படேய் டெச்சோ ஹுன் சென்னுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் (‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’) ‘சந்தேஷ் மொஹபோர்வோர் தி பேய் ஹன் மானெட்’ னுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக்னுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார்.
இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









