ஒரு நாடு என்ற வகையில் பொதுவானதொரு கனவு உருவாகி வருவதாகவும், பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் “சிஹின கமனாந்தய” (Dream Destination / பயண இலக்கு) திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை புகையிரதத் திணைக்களம் என்பன இணைந்து செயற்படுத்தும் “சிஹின கமனாந்தய” (Dream Destination / பயண இலக்கு) திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தைச் 10.09.2026 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தாவூதி போரா சங்கத்தினால் (Dawoodi Bohra Association) 60 மில்லியன் ரூபா செலவில் புதுப்பிக்கப்பட்ட புகையிரத நிலையம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்ட புகையிரத நிலையத்தை அடைவதற்கான புதிய மேம்பாலம் என்பவற்றைப் பிரதமர் பார்வையிட்டார்.
அங்கு உரையாற்றிய பிரதமர்,
“கொழும்பு மாவட்டத்தில் பரபரப்பானதும் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானதுமான பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தை இவ்வாறு புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்காகப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இணைந்துகொண்டதற்காகப் போரா சமூகத்திற்குத் தனது விசேட நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறான பொது இடங்களை நவீனமயமாக்கி மக்களுக்குச் சிறந்த வசதிகளை வழங்குவதன் மூலம், இன்று பொதுப் போக்குவரத்து தொடர்பாக மக்கள் மத்தியில் முன்னரைவிட ஆர்வமும் நல்ல அபிப்பிராயமும் உருவாகி வருகின்றது.
மக்களின் கவனத்தையும் ஈர்ப்பையும் வென்றெடுத்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்காகப் பெரும் பங்காற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி கூற வேண்டும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அங்குள்ள தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கையில் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, மக்கள் பொதுப் போக்குவரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது. இதுவரை மக்களை விரக்தியடையச் செய்திருந்த பொதுப் போக்குவரத்துச் சேவையை அபிவிருத்தி செய்து, தனிநபர் வாகனத்தை விடப் பொதுப் போக்குவரத்து இலகுவானது மற்றும் பாதுகாப்பானது என மக்கள் உணரும் சூழ்நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கமைய, பொதுப் போக்குவரத்துச் சேவைக்காக அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்திற்கு அரசாங்கம் அளித்துள்ள முன்னுரிமையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இவ்வேலைத்திட்டத்தின் மற்றுமொரு விசேட கட்டமாகவே அரச நிறுவனங்கள் தனியார் துறையுடன் இணைந்து அபிவிருத்திக்குப் பங்களிக்கும் “சிஹின கமனாந்தய” (Dream Destination) வேலைத்திட்டமும் செயற்படுத்தப்படுகின்றது.
ஒரு நாடு என்பது அரசாங்கத்திற்கு மாத்திரம் சொந்தமானதொன்றல்ல. நாடு என்பது அந்நாட்டில் வாழும் அனைவரினதும் வீடாகும். அவ்வீட்டிற்குத் தனது அறிவாலும், உழைப்பாலும், அல்லது வளங்களாலும் பங்களிப்புச் செய்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இதுவரை காலமும் நம் நாட்டவர்களுக்கு நாட்டைப் பற்றிய ஒரு பொதுவான கனவு இருக்கவில்லை என்பதையும், இப்போது அக்கனவு உருவாகி வருகின்றது என்பதையும் நம்மால் உணர முடிகின்றது.
நாம் காண்பது ஒரு பொதுக் கனவு. அக்கனவை நோக்கிய பயணமே, நமது வீடான இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் இணைந்து ஆரம்பித்திருக்கும் இக்கூட்டுப் பயணமாகும்.
இன்று இங்கு நாம் காண்பது, அப்பயணத்திற்காக நமது மக்களின், நமது பல்வேறு சமூகங்களின் மற்றும் தனியார் துறையின் தீவிரப் பங்களிப்பையே ஆகும். ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு இவ்வாறான கூட்டுப் பங்களிப்பு அத்தியாவசியமானது. ஆகையினால், இப்பங்களிப்பை நாம் வெகுவாகப் பாராட்டுகின்றோம்.
போரா சமூகம் இன்று நமக்கு நினைவூட்டுவதும் இக்கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவத்தையே ஆகும். நாம் தற்போது ஒரு கூட்டுப் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். நமது நாடு எவ்வாறு அமைய வேண்டும், நமது நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும், நமது நாட்டின் வாழ்க்கை முறை எத்தகைய அனுபவமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நம்மிடையே பகிர்ந்துகொள்ளப்பட்ட கூட்டுக் கனவொன்று இருக்கின்றது. அக்கனவானது Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக மேலும் வலுவடைகின்றது” என்று பிரதமர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், கொழும்பு மாநகர சபையின் முதல்வர் விராய் கெலி பால்தசார், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் பத்மப்பிரிய ஆகியோர் உட்பட, Janab Amil Saheb Ibrahim உள்ளிட்ட தாவூதி போரா சங்கத்தின் பிரதிநிதிகள், Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







