சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மத்தியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர் தலைமுறையினர் எதிர்நோக்கும் அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் UNICEF மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 21.09.2026 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை மூன்று பிரதான துறைகளின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
விழிப்புணர்வு மற்றும் வலுவூட்டல், Safety by Design என்ற கருத்தாக்கம், அத்துடன் சட்டம் இயற்றுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகிய துறைகளின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
முதலாவதாக, சிறுவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் பாதுகாப்பான இணையப் பயன்பாடு தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது டிஜிட்டல் செயலணிக்குழுவினால் UNICEF இன் ஆதரவுடன் சிறுவர்களுக்கான Online Safety Guidelines வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை கல்வி அமைச்சின் ஊடாக துரிதமாக அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் தளங்களை வடிவமைக்கும்போது சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை ஆரம்பத்திலிருந்தே உள்ளடக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் “Safety by Design” என்ற கருத்தாக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தனி ஒரு நாடாகக் கலந்துரையாடுவதை விட, ஏறத்தாழ இரண்டு பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதன் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலொன்றை ஏற்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும்.
அந்தப் பிராந்திய ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கையாக, WHO இன் முன்மொழிவுக்கு அமைவாக 2027 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையில் பிராந்திய மாநாடொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, WHO மற்றும் UNICEF இன் ஆதரவுடன் கல்வி, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள், நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுகள் இணைந்து விசேட வட்டமேசை கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்ட மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்வரும் வட்டமேசை கலந்துரையாடலின் (Roundtable Dialogue) ஊடாக இதற்கான எதிர்கால வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் UNICEF பிரதிநிதி எம்மா பிரஹாம் (Emma Brigham) மற்றும் WHO பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் பாண்டவ் (Dr. Rajesh Pandav) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









