பேரிடர் சேவைகளுக்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிவாரணக் குழுக்களும், பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் பொதுமக்களுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதற்கான விசேட பொலிஸ் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (14.10.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அசாதாரண வானிலை நிலவும் இக்காலகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் தயார் நிலையில் உள்ளனர்.
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு மற்றும் நிவாரணச் சேவைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
பேரிடர் சேவைகளுக்காக ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் நிவாரணக் குழுக்கள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதுக்கான விசேட பொலிஸ் பிரிவினரும் தயாராக உள்ளனர்.
அத்துடன், பொதுமக்கள் தங்கள் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆபத்தான அல்லது அவதானமிக்க வீதிகள் மற்றும் இடங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது தகவல் அறிந்தால், அது குறித்து கவனம் செலுத்தி, உடனடியாகத் தமது பகுதியில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு தெரியப்படுத்துமாறு கோறுகிறேன்.
பொலிஸார் ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக, பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாப்பதற்காக சமூகப் பாதுகாப்புக்குழுக்களுடன் இணைந்து விசேட பாதுகாப்பு, நிவாரணச் சேவைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதே வேளை, அவசர தேவைகளின் போது பொதுமக்கள் 118 என்ற பொலிஸ் துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்புக்கொண்டு உதவிகளை பெறமுடியும் என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









