புதிய கல்விச் சீர்திருத்தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு – உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாடொன்றின் எதிர்காலப் பயணம் கல்வியிலேயே தீர்மானிக்கப்படுவதால், புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் தேசிய உரையாடலொன்றை உருவாக்கி, அதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாட்டின் ஊடகங்களே முன்னோடிப் பங்காளிகளாக விளங்குகின்றன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உண்மையான மற்றும் சரியான தகவல்களை மக்களுக்குத் தொடர்பாடல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘RIES’ (Reform Information & Enquiry Service) உத்தியோகபூர்வ இணையதளத்தை வெளியிடுதல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயன்முறை குறித்து மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக 14.10.2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

புதிய கல்விச் சீர்திருத்தச் செயன்முறை தொடர்பாகச் சரியான தகவல்களை மக்களுக்குத் தொடர்பாடல் செய்வதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட ‘RIES’ (Reform Information & Enquiry Service) இணையதளம் இதன்போது பிரதமரின் பங்கேற்புடன் නිල වශයෙන් வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதற்கமைய, கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்களின் வினாக்களைச் சமர்ப்பிப்பதற்கு https://edureformfact.moe.gov.lk என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்,

“இது பாடத்திட்ட மாற்றத்திற்கும் அப்பாற்பட்ட முழுமையான கல்வி முறைமையின் உருமாற்றமாகும். நமது நாட்டின் எதிர்காலம் தரமான கல்வியுடனேயே கட்டியெழுப்பப்படுகிறது. இதனாலேயே, இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தத்தைக் கல்வி அமைச்சின் பணியென்பதற்கும் அப்பால் ஒரு தேசியக் கடமையாக நாம் பார்க்கிறோம்.

நாங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு கட்டத்தை 2026ஆம் ஆண்டில் முதலாம் தரத்திலிருந்து ஆரம்பித்தோம். 2027ஆம் ஆண்டில் கனிஷ்ட இரண்டாம் நிலைப் பிரிவுக்கு, அதாவது 6ஆம் தரத்திற்கு இச்சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்வி முறைமையின் தயார்நிலையை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர் பயிற்சிகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட பல உத்திகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தருணத்தில் உங்கள் பிள்ளையோ அல்லது எனது பிள்ளையோ கல்வி முறைமைக்குள் இல்லாதிருக்கலாம். ஆனால், நாட்டின் பிள்ளைகளின் கல்வியின் எதிர்காலம் இதிலேயே தீர்மானிக்கப்படுவதால், அதற்காக நேர்மறையான உரையாடலொன்றை உருவாக்கி, புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பங்களிப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும். நமக்கு வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருக்கலாம், ஆனால் பிள்ளைகளின் கல்வியை அரசியல் போர்க்களமாகப் பயன்படுத்தாமல் இருப்பது முக்கியமானது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விசேட உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் உபகுழுவின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க,

“புதிய சீர்திருத்தங்கள் மூலம் கல்விப் புலத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. மனனம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் மைய முறையிலிருந்து விலகி, மாணவர்களை மையமாகக் கொண்ட, ஆழமான மற்றும் உண்மையான உலக அனுபவங்களுடன் இணைந்த கற்றல் முறையை நோக்கி நகர்வது இதன்போது இடம்பெறுகின்றது.

இதில் அறிவாற்றல் வளர்ச்சிக்கு மேலதிகமாக, பிள்ளையின் உணர்வுபூர்வமான, சமூக, உடலியல் மற்றும் ஒழுக்கவியல் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே நோக்கமாக அமைகின்றது.

21ஆம் நூற்றாண்டின் தேர்ச்சிச் சட்டகமாக அடிப்படை எழுத்தறிவு (தொழில்நுட்ப, நிதி, ஊடக மற்றும் அறிவியல் சார்ந்த), நபரிடைத் தேர்ச்சிகள் (விமர்சனச் சிந்தனை, தொடர்பாடல்) மற்றும் பெறுமானக் கட்டமைப்புடன் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துவது இதன்போது இடம்பெறுகின்றது.

மாற்றுக் கற்றல் வழிகளைப் பின்பற்றிப் பொதுக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியை ஒன்றுடன் ஒன்று இணைத்து, 13ஆம் தரம் வரை எந்தவொரு பிள்ளையையும் கைவிடாத பரந்த பாதையொன்றை உருவாக்குவதும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்குள் இடம்பெறுகின்றது.

புதிய மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி, இதுவரை இருந்து வரும் நிணைவாற்றலைப் பரிசோதிக்கும் இறுதிப் பரீட்சை முறையிலிருந்து விடுபட்டு, மாணவரின் பகுப்பாய்வு, ஆக்கபூர்வமான மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறன்களைத் தொடர்ச்சியாக அளவிடும் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், தொடர் மதிப்பீட்டின் ஊடாகப் பிள்ளைகளின் திறமைகளைத் தீர்மானிப்பது இதன்போது இடம்பெறுகின்றது” எனப் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வி நிபுணர்களுக்கு இடையில் கல்விச் சீர்திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்விப் பிரதியமைச்சர் நலின் ஹேவகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஓ.ஜி. தயாரத்ன, கல்விச் சீர்திருத்தப் பிரிவின் மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய, கல்விச் சீர்திருத்தங்கள் பற்றிய தேசியக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects