IMF எப்போதும் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து இருக்கும் – சோனாலி ஜெயின் சந்திரா

சர்வதேச நாணய நிதியம் (IMF) எப்போதும் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் துணைப் பிரிவுத் தலைவர் சோனாலி ஜெயின் சந்திரா தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் வருடாந்த கூட்டத்திற்கு இணைவாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது இலங்கை தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இலங்கையின் பொருளாதார நிலைமை தற்போது மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிதிச் செயற்பாடுகள் மிகவும் வலுவாக உள்ளன. வருமான விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. கடன் மறுசீரமைப்பும் பெரும்பாலான பகுதி நிறைவடைந்துள்ளது. தொடர்ச்சியாக 11 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி நேர்மறையான (Positive) மட்டத்தில் காணப்படுகிறது.

நெருக்கடி காலத்தில் எதிர்கொண்ட பின்னடைவுக்குப் பிறகு, ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியிலும் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது. இது இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருந்தது. எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

அடுத்ததாக உள்ள கேள்வி என்னவென்றால், அடுத்து என்ன நடக்கும் என்பதுதான். நான் முதலில் கூற விரும்புவது, இன்னும் 2 மதிப்பாய்வுகள் செய்ய வேண்டியுள்ளன. எனவே, தற்போதுள்ள திட்டத்தின் கீழ் மேலும் ஒரு முக்கியமான பகுதி எஞ்சியுள்ளது.

ஒக்டோபர் தொடக்கத்தில் நாங்கள் 7வது மதிப்பாய்வு தொடர்பில் பணியாளர்கள் மட்டத்திலான உடன்பாட்டை எட்டினோம். வரவிருக்கும் வாரங்களில் பணிப்பாளர் சபை அதனை பரிசீலிக்கும். அதன் பிறகு மார்ச் மாத இறுதியில் திட்டம் நிறைவடைவதற்கு முன்னர் மேலும் ஒரு மதிப்பாய்வுத் தவணை உள்ளது.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதும், நான் குறிப்பிட்ட சீர்திருத்தங்களின் முடிவுகளை வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியம் என நினைக்கிறேன்.

அதற்கு அப்பால் செல்லும்போது, அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு தொடர்ந்து செயற்படப் போகிறது என்ற கேள்வி உள்ளது.

நிதித் திட்டம் ஒன்றைக் கோருவதா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க முடியும். இலங்கைக்கு உதவி செய்ய எங்களிடம் பல வழிகள் உள்ளன. அது புதிய நிதியளிப்புத் திட்டமாக இருக்கலாம் அல்லது கொள்கை ஆலோசனைகளாக இருக்கலாம்.

எனவே, இலங்கைக்குத் தேவையான எந்த வகையிலும் ஆதரவளிக்க நாங்கள் தயார் என்றே கூற வேண்டும். எனவே, இது குறித்து நாம் எதிர்காலத்தில் பேசுவோம்.

எவ்வாறாயினும், நாங்கள் எப்போதும் இலங்கையுடன் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு பங்காளியாக இருப்போம்” என்று கூறினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects