இன்றைய தினத்தில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது – நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 38 மத்திய மற்றும் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தெதுரு ஓயா, இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, யான் ஓயா மற்றும் உஸ்கல சியம்பலன்கமுவ உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான்பாயும் நீர்மட்டம் ஒப்பீட்டளவில் உயர்மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான ஆபத்து அவதானிக்கப்படவில்லை என்றபோதிலும், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

குறைவான மழைவீழ்ச்சி 27.10.2026 அன்று பதிவாகியிருந்த போதிலும், களனி கங்கை மற்றும் களு கங்கையின் மேல்நிலைப் பகுதிகளின் சில இடங்களில் 40 முதல் 60 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதற்கமைய பெரும்பாலான ஆறுகளின் மேல்நிலைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், நில்வளா, கிங், களு மற்றும் களனி ஆகிய ஆறுகளை அண்டிய சில தாழ்நிலப் பகுதிகளில் இன்னமும் சிறிய அளவிலான வெள்ள நிலைமை நிலவி வருகின்றது.

நில்வளா கங்கையின் அக்குரஸ்ஸ பகுதிக்குக் கீழ் உள்ள தலஹகொடை மற்றும் மாத்தறைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும், கிங் கங்கையின் பத்தேகம பகுதியிலும் நீர்மட்டம் சிறிய அளவிலான வெள்ள மட்டத்திலேயே காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் களு கங்கையின் மில்லகந்த, உடுபவுல மற்றும் எல்லகாவ ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன், களுத்துறை மாவட்டத்தின் ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் மேல்நிலைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தபோதிலும், கம்பஹா மாவட்டத்தின் கடான மற்றும் ஜா-எல போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தொடர்ந்து தேங்கி நிற்கக்கூடும்.

இன்றைய தினத்திலும் (28.10.2026) சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், மழை பெய்யும் பகுதிகளில் ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளின் நீர்மட்டம் மீண்டும் உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே நீர் தேங்கியுள்ள இடங்களில் நீராடுதல், நீர் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் மற்றும் ஏனைய ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects