நாடளாவிய ரீதியில் விசேட மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தேசிய நிகழ்ச்சித் திட்டம்!

இலங்கைப் பெண்களிடையே அதிகம் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் தலைமையில் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற குறித்த சங்கக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் நோயை முற்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதன்போது விளக்கமளித்தனர்.

நாட்டில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 பேர் வரை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவதுடன், ஆண்டுதோறும் சுமார் 1,000 பெண்கள் இந்த நோய் காரணமாக உயிரிழப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு அதிகரித்தாலும், பயம், வெட்கம் மற்றும் போதுமான விழிப்புணர்வு இன்மையால் சிகிச்சைக்குத் தாமதமாக நாடுவதே பிரதான பிரச்சினையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாராளுமன்றப் பெண் உறுப்பினர்கள் தங்களது தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் சுகாதார பிணி ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றுக்கு நேரடிப் பங்களிப்புச் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது, பாராளுமன்றப் பெண் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களிடையே இளஞ்சிவப்பு நிறக் குறியீடுகள் (Pink ribbons / Pink wristbands) மற்றும் ஆடைகளைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்துக்கு தமது தீவிரப் பங்களிப்பை வெளிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்கள், தோட்டப் பகுதிகள் மற்றும் நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் சுகாதார சேவைகளை குறைவாக நாடும் பிராந்தியங்களைச் சேர்ந்த பெண்களை ‘சுவனாரி’ (Suwanari) நடமாடும் மருத்துவ முகாங்களுக்கு ஈர்க்கவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது 35 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களில் 50 வீதமானோர் மட்டுமே சுவனாரி மருத்துவ முகாமுக்குப் பங்கேற்பதால், அப்பெண்களை மார்பகப் புற்றுநோயை முற்கூட்டியே கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதும், அதற்கான வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் செயற்படும் பெண்கள் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து, 35 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களை பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் பரந்த வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, எதிர்வரும் ஜனவரி மாதம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்புப் கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் வரவு-செலவுத் திட்டச் செயல்பாட்டில் பால்நிலை உணர்திறன் கொள்கைகளை உள்வாங்குவதற்குத் தொழில்நுட்ப ஆலோசனைக் உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects