தீபாவளியை முன்னிட்டு, 93 நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிவதொண்டர் திருக்கூடம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கோப்பாவெளி மற்றும் பால்ச்சேனை கிராமங்களைச் சேர்ந்த 134 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளன.
கடந்த 01.11.2026 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் கோப்பாவெளி கிராம சேவகர் பிரிவில் சிங்கப்பூர் வாழ் தமிழர்களான சபாபதி குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் 34 குடும்பங்களுக்கும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் பால்ச்சேனை கிராம சேவகர் பிரிவில் சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த செ.யோகராஜா குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் 100 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 93 நண்பர்கள் அமைப்பின் சார்பில் இணைப்பாளர் சக்தீஸ்வரன், கிருபாகரன், ருஷாந்தன், உருத்திரமூர்த்தி ஆகியோரும், பால்ச்சேனை சிவதொண்டர் திருக்கூடத்தின் உபதலைவர், கோப்பாவெளி சிவதொண்டர் திருக்கூடத்தின் தலைவர் கமல்ராஜ் மற்றும் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
93 நண்பர்கள் அமைப்பு என்பது 1990ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்திலும், 1993ஆம் ஆண்டு உயர்தரத்திலும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி மற்றும் சிவாநந்தா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயின்ற நண்பர்கள் ஒன்றிணைந்த அமைப்பாகும்.
இவ்வமைப்பானது கொரோனா காலம் முதல் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி ஊக்குவிப்பு, வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









