இந்தியா – இலங்கை இடையிலான நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கான பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் 30 கிலோ கிராம் வரையான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு, சுமார் 3 முதல் 4 மணித்தியாலங்கள் வரை இடம்பெறும் இந்தக் கப்பல் சேவை, செவ்வாய்க்கிழமையைத் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்னர், நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் ஒருவருக்கு 10 கிலோ கிராம் வரையான பொருட்களையும், காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிக்கும் ஒருவருக்கு 15 கிலோ கிராம் வரையான பொருட்களையும் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தனியான கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய பண்டிகைக் காலச் சலுகையாக, ‘சுபம்’ கப்பல் நிறுவனம் ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தை 6,000 இந்திய ரூபாவிலிருந்து 5,500 இந்திய ரூபாவாகக் குறைத்துள்ளது.
இதன் மூலம் பயணக் கட்டணத்தில் 500 இந்திய ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயணிகள் 30 கிலோ கிராம் வரையான பொருட்களை எவ்வித மேலதிக கட்டணமுமின்றி எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாகப்பட்டினத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் பிரதம வர்த்தக அதிகாரி சிவராம், இந்தியா – இலங்கை இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கப்பல் சேவை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஆன்மிகம், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக 55,310 பயணிகள் இந்தக் கப்பல் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வானிலை ஆய்வு மையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்படும் நாட்களைத் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









