இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அதன் முதலாவது உத்தியோகபூர்வ சோதனை ஓட்டம் 11.11.2026 அன்று கொழும்பு துறைமுக நகர (Port City) வளாகத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் Yi Hang நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் e VTOL வகையைச் சேர்ந்த பயணிகள் ட்ரோன் விமானங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
ஓடுதளத்தின் (Runway) தேவையின்றி செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கக்கூடிய இந்த ட்ரோன் விமானங்களை பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் அவசர சேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் மாதம் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, இத்திட்டமானது ஆரம்பத்தில் வர்த்தக ரீதியிலான சேவையாக அன்றி ஒரு முன்னோடிப் பரீட்சார்த்த திட்டமாகவே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், சுமார் ஆறு மாத காலத்திற்கு கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இச் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக இரு பயணிகள் பயணிக்கக்கூடிய E216 ரக ட்ரோன் விமானம் ஒன்றும் சமீபத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
16 சுழலிகள், 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்ட இந்த ட்ரோன் விமானம், கணினி அமைப்பின் மூலம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும், ஒரே கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொலைதூரத்தில் இயக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதுடன், ஏதேனும் அவசர விபத்து அல்லது தகவல் தொடர்பில் தடங்கல் ஏற்பட்டால், தானாகவே பாதுகாப்பான நடவடிக்கை முறைகளுக்கு மாறும் தொழில்நுட்ப வசதியும் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது.
எதிர்காலத்தில் இந்த பயணிகள் ட்ரோன் சேவையை இயக்குவதன் மூலம் சீகிரியா, பிதுரங்கலை மற்றும் தீவுகளைச் சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு வான்வழியாகச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








