கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர், சனத்தொகை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய பாராளுமன்ற லீக்கின் (CPE) தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொரிய தேசிய சட்டமன்றத்தின் புலனாய்வுக் குழுவின் தலைவரும், குறித்த பாராளுமன்ற லீக்கின் உப தலைவருமான லீ யாங்-சூ (Lee Yang-soo) தலைமையில் வருகை தந்த இத்தூதுக்குழுவில், லீக்கின் உறுப்பினர் குவாக் சாங்-இயோன் (Kwak Sang-eon), கொரிய – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர் கிம் சோ-ஹீ (Kim So-hee) மற்றும் இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் யூன்-ஜுங் கிம் (Youn-Jung Kim) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
2027 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கையை அண்மையில் பாதித்த சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் ஏற்பட்ட கணிசமான சேதங்கள் குறித்துப் பிரதி சபாநாயகர் எடுத்துரைத்தார். அத்துடன், இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்து முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் தொழிலாளர் சக்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் இலவசக் கல்வி முறைமையை வலுப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
இதற்குப் பதிலளித்த கொரியப் பிரதிநிதிகள், தமது நாட்டில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதத்தை எதிர்கொள்ளப் புதிதாகத் திருமணமான தம்பதியினருக்கு வழங்கப்படும் குறைந்த வாடகை வீடமைப்புத் திட்டங்கள், குறைந்த வட்டி வீதக் கடன்கள் குறித்து விளக்கினர். மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதிக்காத வகையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 இலிருந்து 65 ஆக அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பொருளாதார அபிவிருத்தியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இலங்கையில் கொரிய கலாசாரம் மற்றும் பாப் இசை பிரபலமடைந்து வருவதைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவது குறித்தும், தென்கொரியாவில் தொழில்புரியும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் ஊடாக நாட்டிற்குப் பொருளாதார நன்மைகளை ஈட்டுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இறுதியாக, அடுத்த வருடம் தென்கொரியா தலைமை தாங்கி நடத்தவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய – பசுபிக் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் (APPCED) கலந்துகொள்ளுமாறு இலங்கைப் பாராளுமன்றத்திற்குக் கொரியத் தூதுக்குழுவினர் அழைப்பு விடுத்ததுடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேசக் கண்காட்சியில் கொரிய வர்த்தக நிறுவனங்களின் பங்கேற்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல், சுற்றுச்சூழல் மீள்திறன், சனத்தொகைக் கொள்கைகள், கல்வி மற்றும் பொருளாதாரப் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()





