முடி உதிர்வுக்குத் தீர்வாக புதிய மின்னணு சீப்பை கண்டு பிடித்த சீன விஞ்ஞானிகள்!

முடி உதிர்வு மற்றும் வழுக்கைத் தன்மைக்குத் தீர்வளிக்கும் வகையில், முடி மீண்டும் வளர்ச்சியடையத் தூண்டும் புதிய மின்னணு சீப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்தச் சாதனம் மூலம் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட எலிகளில் வெறும் 28 நாட்களுக்குள் சுமார் 98 சதவீத முடி வளர்ச்சியை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Detangle’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மின்னணு சீப்பு, பீஜிங்கில் உள்ள பீஹாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் ஹொங்கொங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி Nature Communications என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்தச் சாதனம் மென்மையான மின்சாரத் தூண்டுதலையும், முடி வேர்க்கால்களுக்கு நேரடியாகச் சிகிச்சை மூலக்கூறுகளைச் செலுத்தும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்துள்ளது.

பொதுவாக முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் தோலில் பூசப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எனினும், இந்தப் புதிய மின்னணு சீப்பில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக பற்களில் மிகச்சிறிய மின்முனைகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை தலைமுடியைச் சீவும்போது மின்சாரத் தூண்டுதல்களை உருவாக்குகின்றன.

இந்த மின்சாரத் தூண்டுதல்கள் மூலம் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மூலக்கூறுகள் தோலின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி, முடி வேர்க்கால்களைச் சென்றடைவது மேம்படுத்தப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரபணு மற்றும் ஹோர்மோன் தொடர்பான காரணங்களால் ஏற்படும் வழக்கமான வழுக்கைத் தன்மையை ஒத்த வகையில், செயற்கையாக முடி உதிர்வு ஏற்படுத்தப்பட்ட எலிகளில் இந்தச் சாதனம் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது, மின்சாரத் தூண்டுதல் மற்றும் சிகிச்சை மூலக்கூறுகள் ஆகிய இரண்டையும் இணைத்துப் பயன்படுத்திய எலிகளில், 28 நாட்களின் பின்னர் சிகிச்சை வழங்கப்பட்ட பகுதியில் சுமார் 97.85 சதவீத முடி வளர்ச்சி பதிவாகியுள்ளது.

இதற்கு மாறாக, முடி உதிர்வுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் மினொக்சிடில் (Minoxidil) மருந்தைப் பயன்படுத்திய எலிகளில் அதே காலப்பகுதியில் சுமார் 70 சதவீத முடி வளர்ச்சியே பதிவாகியுள்ளது.

இந்த முடிவுகள், தற்போது நடைமுறையில் உள்ள தோலில் பூசப்படும் மருந்துகளை விடவும் புதிய மின்னணு தொழில்நுட்பம் முடி வளர்ச்சியைத் தூண்டுவதில் அதிக செயல்திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

அன்றாடம் பயன்படுத்தப்படும் தலைமுடி சீவும் செயற்பாட்டிலேயே சிகிச்சை முறையை உள்ளடக்குவதன் மூலம், முடி உதிர்வுக்கான சிகிச்சையை இலகுவாக்குவதே இந்தச் சாதனத்தை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாகும்.

எனினும், இந்தச் சாதனம் தற்போது பரிசோதனை நிலையிலேயே உள்ளதுடன், மனிதர்களுக்கு முடியை மீண்டும் வளரச் செய்வதில் அதன் பாதுகாப்பும் செயல்திறனும் மருத்துவ ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, பொதுமக்களின் மருத்துவப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு முன்னர், அதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகாலப் பக்கவிளைவுகள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளும் மனிதர்களை உள்ளடக்கிய மருத்துவப் பரிசோதனைகளும் அவசியமாகும்.

உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் வழுக்கைத் தன்மைக்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects