பட்டதாரி ஆசிரியர் நியமன நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, இன்று (20.11.2026) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் மாத்திரம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ விடுத்துள்ள அறிவிப்பில், நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுகள் முன்னர் திட்டமிடப்பட்டபடியே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண வாரியான புதிய திகதிகள் நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய திகதிகள் மாகாண அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதியும், வடக்கு, தென், கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. 

மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 29ஆம் திகதியும், மத்திய மாகாணத்திற்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் முதலாம் திகதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்துடன் அனுப்பப்பட்ட அறிவிப்புக்கு அமைவாக, பாடசாலைகளுக்கான விருப்பத் தெரிவை (Preference) உள்ளிடுவதற்கான ஒன்லைன் (Online) முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது நவம்பர் 19ஆம் திகதி முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் Teacher Recruitment Application System என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

நவம்பர் 19ஆம் திகதியுடன் இந்த ஒன்லைன் முறைமை காலாவதியாகாது எனவும், விண்ணப்பதாரர்கள் தாம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நாளின் இரவு 8 மணி வரை இதில் தகவல்களை உள்ளிட முடியும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நாள் வரையிலும் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், கடந்த 2026.10.30ஆம் திகதி இணையதளத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ள பக்கத்தின் பிரதியையும், தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு, நேர்முகத் தேர்வு நடைபெறும் வளாகத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு (Waiting Room) அன்றைய தினம் காலையில் வருகை தர வேண்டும். 

அங்கு காலை 8 மணி முதல் ஒன்லைன் முறைமையில் நுழைவதற்கான அனுமதியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்களுக்கு அமைய ஒன்லைன் முறைமையில் தகவல்களை உள்ளிடும் அதேவேளை, நேர்முகத் தேர்வு மற்றும் செயல்முறைத் தேர்விலும் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க முடியும். 

அவ்வாறான விண்ணப்பதாரர்கள் தேர்வுகளில் பங்கேற்ற பின்னர், அன்றைய தினம் இரவு 8 மணி வரையிலும் காத்திருப்பு அறைக்கு வந்து பாடசாலை விருப்பத் தெரிவு ஆவணங்களைப் பிரதி எடுத்துக் கையளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குக் கல்வி அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects