பிரதமரை சந்தித்த இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் உபவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா!

உயர்கல்வித் துறைக்கு ஆற்றிய சேவைக்காக அண்மையில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரால் ‘நைட்’ (Knight) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் (University of Leicester) தலைவரும் உபவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, 25.11.2026 அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்நிகழ்வில் சேர் நிஷான் கனகராஜாவின் பாரியார் தபிதா கனகராஜா, இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அப்சரா கல்தேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜாவை மீண்டும் இலங்கைக்கு அன்புடன் வரவேற்ற பிரதமர், அவர் பெற்றுக்கொண்ட இக்கௌரவப் பட்டத்துக்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் படைத்துள்ள சாதனைகளையும் பாராட்டினார்.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாகக் கல்விசார் பங்காளித்துவங்கள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இங்கிலாந்தின் கற்கை நெறிகளுக்கான அனுமதி மற்றும் உயர்கல்விப் பாதைகளைத் திறந்துவிடுதல் உள்ளடங்கலாக, இலங்கை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்துப் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா இதன்போது தெளிவுபடுத்தினார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளித்த பிரதமர், தொழிற்கல்வித் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதன் அவசியத்தையும், அதனைத் தேசிய கல்வி முறைமையுடன் மேலும் வலுவாக ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்வி தொடர்பாக நிலவும் பாரம்பரிய மனப்பாங்குகளை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மேற்படிப்புக்கும் தொழில்வாய்ப்புக்குமான முக்கியமானதும் சமமான பெறுமதியைக் கொண்டதுமான ஒரு பாதையாகத் தொழிற்கல்வி அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மாறிவரும் உலகின் தேவைகளுக்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான அறிவு, திறன்கள் மற்றும் தேர்ச்சிகளுடன் இளைய தலைமுறையினரைத் தயார்படுத்தி, கல்வி முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதே இச்சீர்திருத்தங்களின் நோக்கமாகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளிப் பொறியியல் மற்றும் ஏனைய துறைசார் பிரிவுகள் உள்ளடங்கலாக, இலங்கையின் அபிவிருத்தித் தேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வளர்ந்து வரும் மற்றும் முன்னணித் துறைகளில் ஆராய்ச்சிப் பங்காளித்துவங்களையும் கல்விசார் ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்துப் பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், இலங்கைக்குள்ளேயே தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இதன்மூலம் மாணவர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய பங்காளித்துவங்களின் ஊடாகக் கற்கை நெறிகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் சர்வதேச அனுபவங்களிலிருந்து இலங்கை மாணவர்கள் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கும் இரு தரப்பினரும் தமது இணக்கத்தை வெளியிட்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects