முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை வழங்குவதன் மூலம் அடுத்த 3 வருடங்களில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளது. இதன்படி, காணிகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தில் மாத்திரம் 9 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இக்காணிகள் பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் அடிப்படையிலும் நீண்ட கால குத்தகை அடிப்படையிலும் திட்ட வாய்ப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.
இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ், மேல், தெற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 24 திட்டங்களுக்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள்ன.
கொழும்பு கோட்டை, வரகாபொல, காலி கோட்டை, அவிசாவளை, தலவத்துகொட, கொட்டாவ, ஏகல, கண்டி, நாரஹேன்பிட்டி, நாவலப்பிட்டி, பலாங்கொடை, கொலன்னாவ, வெள்ளவத்தை, பாதுக்க ஆகிய பிரதேசங்களில் அந்தந்த திட்டங்களுக்கு உரிய காணிகள் அமைந்துள்ளன.
இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய வீட்டுத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், பல மாடி வாகனம் நிறுத்துமிடங்கள், அலுவலக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள், பொழுதுபோக்கு, சுகாதாரம், கல்வி, கைதொழில்கள் என்று இத்திட்டங்கள் துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வருடத்தில் இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 2 திட்டங்களுக்கு அரச மற்றும் தனியார் பங்காளித்துவ அடிப்படையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக சமர்ப்பிக்கப்படும் செயற்திட்டங்களுக்கு 09-120 நாட்களுக்குள் அங்கீகாரம் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றையும் அமைத்துள்ளது. அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் இருந்து விரைவாக தொடர்புடைய அனுமதிகளை வழங்குவதற்கான ஒரு சேவைப் பிரிவான One Stop Unit ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇