இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் (VTA) ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு தேசிய தொழிற் தகைமை (NVQ) தரச்சான்றிதழ் பாடநெறிகள் நடைபெற்றுவருகின்றது.
அதன் ஒரு கட்டமாக காத்தான்குடி பிரதேச செயலகத்தில் தேசிய தொழிற் தகைமை பாடநெறிகள் தொடர்பாக விழிப்பூட்டல் கலந்துரையாடல் (16.01.2024) அன்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது .
இக் கலந்துரையாடலில் உதவிப்பிரதேச செயலாளர் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர், தொழிற்பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தயோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத்துத் தெரிவித்த அதிகார சபையின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் எம். நளீம் காத்தான்குடியில் இப்பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டலின் போது தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது காணப்படும் சூழ்நிலையில் தேசிய தொழிற்தகைமைச் தரச்சான்றிதழ் வழங்கப்படும் பாடநெறிகளுடனான வேலைவாய்பிற்கே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக வரவேற்புக் காணப்படுகின்றது .
எவ்வித தராதரங்களும் இன்றி வேலை வாய்ப்பினை பெறும்போது மிக குறைந்த சம்பளத்திலேயே வேலை செய்ய வேண்டியுள்ளது.
காத்தான்குடி பிரதேச தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் மின்னியல் துறைகளிலான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆரையம்பதி பிரதேசத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தையல் துறைகளில் கற்கை நெறிகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் தங்கள் அலுவலகங்களில் பணியாற்றும் குறைந்த கல்வித்தரங்களை வைத்திருக்கும் இளைஞர் யுவதிகளிடம் இவ்விடயங்களை தெரிவித்து, இப்பயற்சி நெறிகளுக்காக அவர்களையும் அனுப்புவது வரவேற்கத்தக்கது என்பதுடன் இவை நாம் செய்யும் மிகப்பெறுமதியான பணியாகும் என்றும் அவர் தெரிவித்தார் .
அதனால் முடிந்தவரை தொழிலை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகளுக்கு இத்தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ் கற்கை நெறிகளைப் பயில வாய்ப்பேற்படுத்திக் கொடுக்குமாறு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் எம். நளீம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇