இந்த உலகம் பல அதிசயங்களை தனக்குள் பூட்டி வைத்திருக்கிறது. ஒரு நாட்டை போல மற்றொரு நாடு இல்லை, ஒரு நிலப்பரப்பை போல மற்றொரு நிலப்பரப்பு இல்லை. அபூர்வமான விஷயங்கள் இன்னும் மனித அறிவை பிரமிக்க வைக்கிறது.
அந்த வகையில், `நீரின்றி அமையாது உலகு’ எனக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், மழையின்றி ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல, மழையே பெய்யாத ஒரு கிராமம் இருக்கிறது.
அப்படியென்றால் அது பாலைவனமாக இருக்கும் என நினைக்கலாம். அதுதான் இல்லை, இங்கு மக்கள் வசித்து வருகின்றனர்.
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுடாய்ப் என்ற கிராமம் உள்ளது. மலைப்பகுதியான இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3,200 மீற்றர் உயரத்தில் உள்ளது. ஒரு சிவப்பு மணற்கற்களால் ஆன மேடையில் இந்த கிராமம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் இரண்டு பள்ளிகள், ஹதிமி மசூதி மற்றும் மன்சூர் அல் யேமன் மசூதி என இரண்டு மசூதிகள் உள்ளன. அரபியில் கஹ்ஃப் உன்-நயீம் என்று அறியப்படும் `ஆசீர்வாத குகை’ ஹுடாய்ப் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.
மலையின் உச்சியில் பல அழகான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மலை உச்சியில் நின்று பார்க்கும் காட்சியைக் காணவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கிராமத்தில் மழை பெய்யாததற்கு காரணம், இந்த கிராமம் மேகங்களுக்கும் மேல் அமைத்துள்ளது. பொதுவாகவே மேகங்கள் மழையை உருவாக்கும்.
மேகங்களுக்குக் கீழே மழை பொழியும். மேகங்களுக்கு மேல் கிராமம் அமைந்துள்ளதால் மழையே பெய்யாத சூழல் இங்கு நிலவுகிறது. மழை இல்லாததால் இந்த பகுதி வறட்சியுடன் காணப்படுகிறது.
நன்றி – விகடன்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇