மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பின் காரணமாக வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக சுமார் 1,200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள 48 வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக 900இற்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன், 200இற்கும் மேற்பட்ட வான்படை மற்றும் கடற்படை சிப்பாய்களும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், தேவைக்கு ஏற்றவாறு மேலதிக படையினரை வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியர்கள் அல்லாத 72 சுகாதார தொழிற்சங்கங்களை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று (13.02.2024) காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇