“முழுமையான சிகிச்சை முறை” எனும் தலைப்பில் கிழக்கு மாகாண மட்டத்தில் சுகாதார துறைசார்ந்து நிலவும் குறைபாடுகளை நிவத்திப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டீ.ஜீ.எம்.கொஸ்தாவின் ஏற்பாட்டில் , சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரன தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், இரா.சாணக்கியன், அமைச்சுக்களின் செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாணத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், திணைக்களம் சார் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு பிராந்திய சுகாதார பணிமனைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சுகாதாரத்துறை சார் பிரச்சனைகள் இதன் போது அமைச்சருக்கு சுகாதார துறை சார் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்திற்கு முக்கிய தேவைகளாக காணப்படும் பல சுகாதார துறை சார் குறைபாடுகளை மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், பைசல் காசீம் ஆகியோரினால் இதன் போது அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு மாவட்டத்தில் மிக முக்கிய பிரச்சனைகளாக காணப்படும் ஒசுசல, lCU பற்றாகுறை, ஆளணி பற்றாக்குறை, வாகன பற்றாக்குறை, பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை மேம்படுத்துவதன் அவசியம் மற்றும் பழமை வாய்ந்த வாழைச்சேனை வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர்களால் இதன் போது அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் அவற்றிற்கான தீர்வுகளை தாம் மிக விரைவில் பெற்றுத் தருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுனரினால் நிவர்த்திக்க முடியுமான சில விடையங்களை அவர் முடித்துத் தருவார் என தெரிவித்ததுடன், பாரிய செலவில் முன்னெடுக்கப்பட வேண்டிய குறைபாடுகளை அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் நிவர்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇