றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை பரி. தோமா கல்லூரிக்கும் இடையிலான டி.எஸ்.சேனாநாயக்க ஞாபகார்த்த கேடய 145ஆவது நீலவர்ணங்களின் மாபெரும் 3 நாள் கிரிக்கெட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் 07.03.2024 அன்று ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியைக் கண்டுகளிக்கவென உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் இரண்டு கல்லூரிகளினதும் பழைய மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த கிரிக்கெட் சமர் தொடர்ச்சியாக 145ஆவது வருடமாக நடைபெறவுள்ளமை உலக பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையாகும்.
இரண்டு கல்லூரிகளினதும் பாரம்பரிய பண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் அதேவேளை மறக்க முடியாத ஓர் அற்புதமான போட்டியாகவும் இந்த கிரிக்கெட் சமர் பார்க்கப்படுகிறது.
அத்துடன் நீலவர்ணங்களின் சமரானது ஒருபுறம் வீரர்களிடையே போட்டித்தன்மையை ஏற்படுத்தும் அதேவேளை, இரண்டு கல்லூரிகளினதும் சமகால மாணவர்களினதும் பழைய மாணவர்களினதும் ஒன்றுகூடலாகவும் அமைகிறது.
நடப்பு பாடசாலை கிரிக்கெட் பருவகாலத்தில் பல வெற்றிகளுடன் தோல்வி அடையாமல் பலம் வாய்ந்த அணியாகத் திகழும் மஹித் பெரேரா தலைமையிலான பரி.தோமா அணி கடந்த வருடம் அடைந்த தோல்வியை நிவர்த்திக்க முயற்சிக்கவுள்ளது.
கடந்த வருடமும் இதேபோன்ற நிலையில் இரண்டு அணிகளும் 144ஆவது நீலவர்ணங்களின் சமரில் சந்தித்துக்கொண்டபோது பரி. தோமா அணி பலம்வாய்ந்த அணியாக இருந்ததுடன் வெற்றிபெறக்கூடிய அணியாக அனுமானிக்கப்பட்டது.
ஆனால், டாசிஸ் மஞ்சநாயக்க தலைமையிலான றோயல் அணியினர் சகலதுறைககளிலும் பிரகாசித்து 181 ஓட்டங்களால் வெற்றியீட்டி 36ஆவது தடவையாக டி.எஸ். சேனாநாக்க கேடயத்தை சுவீகரித்தது.
அப் போட்டியில் டாசிஸ் மஞ்சநாயக்க முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் அரைச் சதம் பெற்று றோயல் – தோமியன் சமரில் வரலாறு படைத்தார்.
இத் தொடரில் பரி. தோமா 35 தடவைகள் வெற்றிபெற்றுள்ளது.
பரி. தோமா கல்லூரி கடைசியாக 2019ஆம் ஆண்டு டி. எஸ். சேனாநாயக்க ஞாபகார்த்த கேடயத்தை வென்றிருந்தது.
இந்த வருடம் றோயல் அணியில் இடம்பெறும் வீரர்களில் குறிப்பிட்ட சில வீரர்களே திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்களில் முதலாவது வருட வீரரான யசிந்து திசாநாயக்க ஒரு சதம் உட்பட 550 ஓட்டங்களை மொத்தமாக பெற்று அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராகத் திகழ்கிறார்.
ஸ்னேத் ஜயவர்தன (ஒரு சதம் உட்பட 305 ஓட்டங்கள், 20 விக்கெட்கள்), உதவி அணித் தலைவர் ரமிரு பெரேரா (ஒரு சதத்துடன் 456 ஓட்டங்கள், 47 விக்கெட்கள்) ஆகிய இருவரும் பிரதான சகலதுறை வீரர்களாக விளங்குகின்றனர்.
இந்த மூவரைவிட ரெஹான் பீரிஸ் (ஒரு சதம் உட்பட 525 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளார்.
றோயல் அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: அநுர ப்ரஷான்த (பொறுப்பாசிரியர்), எல். கே. டபிள்யூ. சில்வா (பிரதி அதிபர்), சினேத் ஜயவர்தன (தலைவர்), திலக் வத்துஹேவா (அதிபர்), ரமிரு பெரேரா (உதவித் தலைவர்), எம்.ஏ.எம். ரியாஸ் (உதவி அதிபர்), ரொஹான் சொய்சா (தலைமைப் பயிற்றுநர்), நிற்பவர்கள் முன்வரசை: நெத்வின் தர்மரட்ன, ரனுக்க மலவிஆராச்சி, ரெஹான் பீரிஸ், புலான் வீரதுங்க, மத்திய வரிசை: யெனுல பண்டார, தமோத் யஷோத்ய, இசுல கீகனகே, அனிக் பெர்னாண்டோ, யசிந்து திசாநாயக்க, அனுஷ் பொலொனோவிட்ட, உடன்த கங்கேவத்த, குச்சில ரன்மடல, தருள் அம்ப்பென்மொஹொட்டி, பின்வரிசை: ரயான் சுகததாச, தெவிந்து வேவல்வல, கீஷான் பெரேரா, காலித் ரஹிம்டீன், ஒவின அம்பன்பொல, தினுர சேனாரத்ன, ஷேன் அபேரட்ன.
பரி. தோமாவின் கல்லூரி அணியில் அணித் தலைவர் மஹித் பெரேரா 3 சதங்கள் உட்பட 844 ஓட்டங்களைக் குவித்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளார். இவர் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சதம் குவித்து அசத்தியிருந்தார்.
தீசேன் எஹலியகொட (ஒரு சதம், 4 அரைச் சதங்கள் உட்பட 680 ஓட்டங்கள்), தினேத் குணவர்தன (2 சதங்கள், 2 அரைச் சதங்களுடன் 489 ஓட்டங்கள், 13 விக்கெட்கள்), நேதன் கல்தேரா (367 ஓட்டங்கள், 36 விக்கெட்கள்), அபீத் பரணவிதான (ஐந்து தடவைகள் 5 விக்கெட் குவியல்களுடன் 62 விக்கெட்கள்), கவிந்து டயஸ் (38 விக்கெட்கள்), யட்டிந்த சிறிவர்தன (20 விக்கெட்கள்), ஆகாஷ் பெர்னாண்டோ (2 அரைச் சதங்களுடன் 279 ஓட்டங்கள், 19 விக்கெட்கள்) ஆகியோர் மிகத் திறமையாக விளையாடி வந்துள்ளனர்.
பரி. தோமா அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: அபீத் பரணவிதான, கவிந்து டயஸ், சேனாதி புலேன்குலம, மஹித் பெரேரா (தலைவர்), நேதன் கல்தேரா, தினேத் குணவர்தன, ஆகாஷ் பெர்னாண்டோ, திசேன் எஹலியகொட, நிற்பவர்கள் முன்வரிசை: நெதுன் வித்தானகே, டேரியன் டியகோ, அரித் அதிகாரம், யட்டிந்த்ர சிறிவர்தன, அஷேன் பெரேரா, சதேவ் சொய்சா, சச்சித்ர குணசிங்க, ஷனில் பெரேரா, மனித் பெர்னாண்டோ, அனுக் தேவநாராயண, சனுத் எஹலியகோட, பின்வரிசை: அவினாஷ் பெர்னாண்டோ, மிதில சார்ள்ஸ், யொவெல் வர்ணகுலசூரிய, சமஷ் குணவர்தன, அய்மான் அன்ஸாரி, மஹித் ராஜபக்ஷ, தெவின் ஜயசூரிய, தினேத் பீரிஸ், அன்ஷேன் டி சில்வா.
இரண்டு அணி வீரர்களின் ஆற்றல்களையும் அணிகளின் பெறுபேறுகளையும் ஒப்பிடுகையில் பரி. தோமா பலம் வாய்ந்த அணியாகத் தென்படுகிறது.
ஆனால், றோயல் அணியை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது.
பொதுவாக நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமரில் இரண்டு அணியினரும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் விளையாடுவதால் இந்த வருடப் போட்டி பரபரப்பான முடிவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கலாம்.
சாதனைகள்
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பரி. தோமா சார்பாக டுலீப் மெண்டிஸ் தனிநபருக்கான அதிகூடிய 184 ஓட்டங்களை 1972இல் பெற்றார். இது 2 நாள் கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாகும்.
றோயல் சார்பாக சுமித்ர வர்ணகுலசூரிய 197 ஓட்டங்களை 1984இல் குவித்து வரலாறு படைத்தார். இந்த எண்ணிக்கையே நீலவர்ணங்களின் 3 நாள் கிரிக்கெட் சமரில் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.
பந்துவீச்சில் பரி. தோமா சார்பாக ப்ரெட் தொமஸ் 3 ஒட்டங்களுக்கு 8 வீக்கெட்களை வீழ்த்தி இரண்டு அணிகளிலும் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார். இந்த சாதனை 1884இல் நிலைநாட்டப்பட்டது.
றோயல் – தோமியன் மாபெரும் கிரிக்கெட் சமருக்கு 19ஆவது தொடர்ச்சியான வருடமாக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.
இப் போட்டிகளில் பெறப்படும் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் 1,000 ரூபா வீதமும் வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 10,000 ரூபா வீதமும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தினால் காருண்ய நிதியாக வழங்கப்பட்டு பின்தங்கிய பாடசாலைகளின் கிரிக்கெட் மேம்பாட்டுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇