சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாடசாலை அதிபர் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.
அதன் பிரகாரம், அனர்த்த நிலைமைகளால் இடம்பெயர்ந்து ஏற்கனவே பரீட்சைக்கு தோற்றிய பாடசாலையில் மீண்டும் தோற்ற முடியாத நிலைமை காணப்படும் பரீட்சார்த்திகள் உரிய காலத்திற்குள் அது குறித்து அறிவித்தால் வேறு பரீட்சை மத்திய நிலையங்களில் தோற்றுவதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என அவர் கூறினார்.
0112 784 537 மற்றும் 0112 788 616 என்ற எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பரீட்சை திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் அனர்த்தம் காரணமாக அழிவடைந்திருந்தால் அவர்கள் உடனடியாக அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அனுமதி அட்டைகள் காணாமல் போயிருந்தால் அல்லது அழிவடைந்திருந்தால் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை பதிவிறக்கம் செய்ய முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும், அடையாள அட்டைகள் காணாமல் போயிருந்தால் அல்லது அழிவடைந்திருந்தால் தபால் அடையாள அட்டைக்கான அளவில் எடுக்கப்பட்ட 02 படங்களை உறுதிப்படுத்தி, அடையாள அட்டைக்கு பதிலாக சமர்ப்பிக்க முடியும் என அவர் கூறினார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










